Tuesday, November 08, 2011சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா சார்பில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தேதியை தள்ளிவைக்கக் கோரி இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மனுவில், நவம்பர் 22ந் தேதி ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும், தேவைப்பட்டால் நவம்பர் 23ந் தேதி அன்றும் ஜெயலலிதா ஆஜர் ஆவார் எனக் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து மனுவை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 22ந் தேதி ஜெயலலிதா மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரையில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் 252 சாட்சியங்களின் அடிப்படையில் 1,384 கேள்விகள் தயாரிக்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் அதற்காக அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கேள்வி பதில் விசாரணைக்கு ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, அக்டோபர் 20 மற்றும் 21ம் தேதிகளில் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். 2 நாட்கள் விசாரணையில் மொத்தமுள்ள 1,384 கேள்விகளில் 567 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இதையடுத்து, எஞ்சிய கேள்விகளுக்கு பலிதளிப்பதற்காக விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனையா தள்ளிவைத்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கேள்வி பதில் விசாரணைக்கு ஜெயலலிதா ஆஜராக வேண்டும். அதே நேரத்தில் அவர் விசாரணை தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கோர வேண்டுமானால் சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஜெயலலிதா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஜெயலலிதா சார்பில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தேதியை தள்ளிவைக்கக் கோரி இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா தரப்பு வாதத்தை கேட்ட, பின்னர் சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 22ந் தேதி ஜெயலலிதா மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.
No comments:
Post a Comment