Monday, November 21, 2011சென்னை : 153 நாடுகளின் 936 கலாசார சின்னங்களின் 1000 அரிய புகைப்படங்களின் கண்காட்சியை, கோட்டை மியூசியத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை பாரம்பரிய வாரமாக இந்திய அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இந்த வாரம் முழுவதையும் கண்காட்சிகள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அருங்காட்சியக ஆணையர் சு.ஜவஹர் கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள 153 நாடுகளின் 936 கலாச்சார சின்னங்கள் மற்றும் முக்கிய இடங்கள் பற்றிய புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அருங்காட்சியகங்கள் பிரிவு தொல்லியல் துணை கண்காணிப்பாளர் கு.மூர்த்தீஸ்வரி அளித்த பேட்டி:
இந்த கண்காட்சியில் மொத்தம் 1,000 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். நிறைய பேருக்கு எந்த நாட்டில் என்ன கலாச்சார சின்னங்கள் உள்ளன என்பது தெரிவதில்லை. இங்கு அனைத்தையும் புகைப்படம் வாயிலாக பார்த்து அறிந்து கொள்ளலாம். கலாச்சார சின்னங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நினைத்தால், தொடுதிரை கணினி மூலம் அவற்றை தெரிந்து கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தென்ன பகுதியில் உள்ள ஆந்திராவின் நாகர்ஜீன கொண்டா, அமாரவதி, கொண்டாபூர், சந்திரகிரி, கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினம் மற்றும் ஹளபேடு, கேரளாவின் கொச்சி மட்டஞ்சேரி மாளிகை மற்றும் சென்னை கோட்டை உள்ளிட்ட 8 அருங்காட்சியகங்களிலும், புகைப்பட கண்காட்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு மூத்தீஸ்வரி கூறினார்.
No comments:
Post a Comment