Tuesday, November 15, 2011

13வது திருத்தச் சட்டமூலம் இந்தியாவினுடையதல்ல, இலங்கை அரசாங்கத்தாலேயே இது தயாரிக்கப்பட்டது-ஷியாம் சரண்!

Tuesday, November 15, 2011
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு இப்போது வளர்ச்சியடைந்திருக்கிறது என்று முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய-இலங்கை உறவின் முக்கியத்துவத்தை அதிகம் உணர்ந்தவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் முன்னர் அமைக்கப்படுவதாக இருந்து கிடப்பில் போடப்பட்ட தரைவழிப் பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண் தெரிவித்தார்.

இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும், இலங்கை இந்திய உறவும் என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றிய ஷியாம் சரண் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

இந்தியாவுக்கும், இலங்கையின் வட பகுதிக்கும் இடையில் கடந்த காலத்தில் நிலவிய இறுக்கமான தொடர்புகள் பற்றிய நினைவூட்டிப் பேசிய அவர், இந்த உறவு மேலும் பலமடைவதற்கு இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான இராமர் பாலம் விரைவில் அமைக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

நான் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்த காலத்தில் இந்த பாலத்தை அமைப்பது பற்றி இரண்டு நாடுகளும் ஒரு இணக்கத்துக்கு வந்திருந்தன. ஆனால், பின்னர் இலங்கையின் வட பகுதியில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக அது கைவிடப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவேண்டும்' என்றார் அவர்.
இலங்கையின் அரசியலமைப்பில் 13வது திருத்தச்சட்டத்தை மேற்கொண்டது இலங்கை அரசாங்கமே தவிர இந்தியா அல்ல என்று தெரிவித்த முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண், அது ஒன்றும் இந்தியா ஏற்படுத்திய திருத்தமல்ல என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டிலேயே காணப்படவேண்டும் என்று இங்கு குறிப்பிட்ட அவர், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, தமிழர்களின் சட்டபூர்வமான அபிலாஷைகளைப் பூர்த்திசெய்கின்ற தீர்வாக அது அமையவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு அண்டை நாடுகளுடனான அதன் உறவு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்திக் கூறிய ஷியாம் சரண், இந்தியாவின் நில மற்றும் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் சிறுபான்மை இனங்கள் சார்ந்த பிரச்சினைகள் இந்தியாவையும் ஒரு வகையில் பாதிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த நாடுகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமானது என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். 'இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் முரண்பாடுகளும், பட்டினியும் நிலவும்போது, இது எதனோடும் சம்பந்தப்படாத ஒரு தீவுபோல இந்தியா இருந்துவிட முடியாது' என்றார் அவர்.

இந்தியா என்கின்ற நாட்டின் பெரிய அளவு காரணமாகவும், அதன் சனத்தொகை உள்ளிட்ட பலமான அம்சங்கள் காரணமாகவும் அண்டை நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சம் கொள்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுவதாக இங்கு தெரிவித்த சரண், இந்த நிலைமையை மாற்றி அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவைக் கட்டியெழுப்பவே இந்தியா பாடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியாகவும், ஏனைய பல வழிகளிலும் பலம் மிக்க ஒரு நாடாக விளங்கும் இந்தியா, தன்னுடைய சில அடைவுகளை அண்டை நாடுகளுடனும் பகிர்ந்துகொண்டு ஒரு கண்ணுக்குத் தெரியாத இணை வட்டம் ஒன்றை அண்டை நாடுகளுடன் ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.

'சார்க் அமைப்பு தனக்குச் சவால் விடும் ஒரு அமைப்பு என்றே ஒரு காலத்தில் இந்தியா கருதியிருந்தது. ஆனால், சார்க் பற்றிய இன்றைய இந்தியாவின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது. இதுபோன்று அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு புதிய மாற்றங்களுடன் வளர்ந்து வருகிறது' என்றார் ஷியாம் சரண்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு இப்போது வளர்ச்சியடைந்திருக்கிறது என்று இங்கு தெரிவித்த ஷியாம் சரண், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய-இலங்கை உறவின் முக்கியத்துவத்தை அதிகம் உணர்ந்தவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைத் தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில் இலங்கையின் வட பகுதி முக்கிய பங்கு வகித்து வந்ததாகத் தெரிவித்த அவர், தலைமன்னார்-இராமேஸ்வரம் இடையிலான கப்பல் போக்குவரத்து இந்த இணைப்பின் பிரதான அம்சமாக இருந்தாகவும் குறிப்பிட்டார்.

'வட பகுதி பலாலி விமான நிலையத்தை புனரமைக்கும் பணியில் இப்போது இந்தியா ஈடுபட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகப் பகுதி கடற்பரப்பில் காணப்படும் சேதமடைந்த கப்பல் கழிவுகளை அகற்றி துறைமுகத்தை துரிதமாகச் செயற்படச் செய்வதற்கு இந்தியா உதவி வருகிறது' என்றார் அவர்.

இவற்றின் அடுத்த கட்டமாக இராமர் பாலம் என்று அழைக்கப்படும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் மீண்டும் செயற்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், இலங்கையின் வட பகுதிக்கும் இடையே காணப்படும் இத்தகைய இறுக்கமான தொடர்புகள் மூலம், எதிர்காலத்தில் இந்திய-இலங்கை உறவில் இலங்கையின் வட பகுதி குறிப்பிடத்தக்கதொரு வகிபாகத்தைக் கொண்டிருக்க முடியும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

இந்திய இலங்கை நட்புறவுக் கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் இந்தியத் துணைத் தூதரக உயரதிகாரி வி.மகாலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இருநாட்டு நட்புறவுகள் குறித்த கருத் துக்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் செயலமர்வுகளின் தொட ரொன்று நடைபெறவுள்ளது. முதலாவது கருத்தரங்கு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 16 ஆம் திகதி மாத்தறை றுகுணு பல்கலைக்கழகத்திலும், 17 ஆம் திகதி கொழும்பு சர்வதேச கற் கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத் திலும் செயலமர்வுகள் நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment