Saturday, November 26, 2011

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய தென் கரையோரப் பிரதேசங்களில் வீசிய கடும் காற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்!

Saturday, November 26, 2011
நாட்டின் தென் கரையோரப் பிரதேசங்களில் வீசிய கடும் காற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காற்றினால் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை ஊடறுத்து கடும் காற்று வீசியதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

இந்த நிலைமையினால் மாத்தறை மாவட்டமே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சீரற்ற வானிலையுடன் கூடிய இந்த நிலைமையின் காரணமாக மாத்தறை மாவட்டத்தில் பத்து பேர் உயிரிழந்ததாக மாவட்ட செயலாளர் டப்ளியூ.கே.கே.அதுகோரள தெரிவித்தார்.

கடும் காற்றினால், காலி மாவட்டத்திலும் 200 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் அசித ரணசிங்க குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பிரதேசத்தில் கடும் காற்றினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை காணாமல் போன மீன்பிடி படகுகளைத் தேடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் திணைக்களம் கூறுகின்றது.

இதற்கென கடற்படையினரால் தென்பகுதி கடற்பிரதேசத்தில் விசேட படகொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்தார்.

கடும் காற்று காரணமாக தென் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிடுகின்றது.

மின்விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக விசேட திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம கூறினார்.

No comments:

Post a Comment