Sunday, October 9, 2011

சீன அரசை எதிர்த்து புத்தத் துறவிகள் தீக்குளிப்பு!

Sunday, October 09, 2011
பீஜிங்: சீனாவின் தென்பகுதி மாகாணம் ஒன்றில், திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து, புத்தமதத் துறவிகள் இருவர் நேற்று தீக்குளித்தனர். முந்தைய திபெத் பகுதியைச் சேர்ந்ததும், தற்போதைய சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ளதுமான அபா பகுதியில், கீர்த்தி மடாலயத்தின் புத்தமதத் துறவிகள் இருவர், நேற்று தீக்குளித்தனர். கடந்த இரு வாரங்களில் அப்பகுதிகளில் நிகழ்ந்த, நான்காவது மற்றும் ஐந்தாவது தீக்குளிப்புச் சம்பவங்கள் இவை.
அப்பகுதி அதிகாரிகள், உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக, அமெரிக்காவில் இயங்கி வரும் "திபெத்திற்கான சர்வதேச பிரசாரம்' இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிச்சுவான் மாகாணத்தில், சீன அரசுக்கு எதிராக, புத்தமதத் துறவிகள், துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். அவற்றில், திபெத் விடுதலைக்காக தங்கள் உயிரைக் கொடுக்க, திபெத்தியர்கள் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல், சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கீர்த்தி மடாலயத் துறவிகள், சீன அரசுக்கு எதிராகத் தொடர்ந்து தீக்குளிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மடத்தை கடந்த ஏப்ரல் மாதம், சீன அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் மூடிவிட்டனர். மடத்தின், 300 துறவிகள் எங்கிருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அவர்களைக் காணாமல் போக்கடித்ததாக, ஐ.நா., சாட்டிய குற்றச்சாட்டை சீன அரசு மறுத்தது. தற்போது கடந்த இரு வாரங்களாக அடுத்தடுத்து கீர்த்தி மடத்துத் துறவிகள், சீன அரசுக்கு எதிராக தீக்குளித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment