Friday, October 21, 2011

கருணை மனுக்கள் கிடப்பில் போடவில்லை : சுப்ரீம் கோர்ட்!

Friday, October 21, 2011
புதுடெல்லி: தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் கருணை மனுக்களை கிடப்பில் போடவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தூக்கு தண்டனை பெற்ற கொலை குற்றவாளிகள் கடைசி வாய்ப்பாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புகிறார்கள். இந்த கருணை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், குற்றவாளி எந்த மாநிலத்தை சேர்ந்தவரோ அந்த மாநிலத்துக்கும் ஜனாதிபதி அலுவலகம் அனுப்பி வைக்கும். அவர்கள் செய்யும் பரிந்துரை அடிப்படையில் கருணை மனுவை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்து வருகிறார்.

கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இந்திய அரசியல் சட்டத்தில் கொடுக்கப்படவில்லை. இதனால் பல கருணை மனுக்கள் நீண்ட நாட்களாக ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது. 2009ம் ஆண்டு வரை 28 கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தன. 2010ல் 2 மனுக்கள், 2011 ல் இரண்டு மனுக்கள் என தற்போது மொத்தம் 32 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அண்மையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ராஜீவ்காந்தி கொலையாளிகள் மற்றும் சீக்கிய தீவிரவாதி தேவிந்தர் பால்சிங் புல்லர் ஆகியோரது கருணை மனுக்களை நிராகரித்தார்.

இதை எதிர்த்து புல்லர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும், ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் கருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டதை தங்கள் மனுக்களில் சுட்டிக் காட்டியிருந்தனர். புல்லர் தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மத்திய அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.

அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மொத்தம் 15 கருணை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில் ஒரு கருணை மனு மீது கூட முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ. ஆட்சிக் காலத்தில் மொத்தம் 14 கருணை மனுக்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment