Sunday, October 9, 2011

வெளியுறவு செயலர் இலங்கையில்- கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!.

Sunday, October 09, 2011
ராமேஸ்வரம்: மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் இலங்கைக்கு போயுள்ள நிலையில், கச்சத்தீவு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை அடித்து விரட்டி தாக்கியுள்ளது இலங்கை கடற்படை.

மத்திய வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் மத்தாய் இலங்கை போயுள்ளார். போவதற்கு முன்பு சென்னை வந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்தார். அப்போது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வரும் செயல் குறித்து கடுமையாக பேசிய முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்சினையை இந்திய அரசு தேசியப் பிரச்சினையாக அணுக வேண்டும். இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் சமீப காலமாக தொடர்ந்து இந்திய மீனவர்களைத் தாக்கி வரும் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த காலிப்படையினர் நேற்றும் மண்டபம் பகுதி மீனவர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

மண்டபம் பகுதியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படை ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் மீனவர்களின் வலைகளை பறித்து கிழித்து எறிந்தனர். மீன்களையும் கடலில் தூக்கிப் போட்டனர். பின்னர் தமிழக மீனவர்களை ஓடுமாறு மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து வேகமாக கரைக்குத் திரும்பி விட்டனர்.

இலங்கைக் கடற்படையின் இந்த காலித்தனம் தொடர்வது குறித்து இதுவரை மத்திய அரசு வாய் திறக்காமல் மூடியபடி இருப்பது மீனவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment