Thursday, October 06, 2011மட்டக்களப்பில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி. இரஞ்சிதமூர்த்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் எதிர் வரும் 7, 8, 9ம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சிறுகைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய அபிவிருத்தி சம்மேளனம் மற்றம் இலங்கை கண்காட்சி நிறுவனம் இணைந்து இவ்வர்த்தகக் கண்காட்சி நடாத்தப்படுகின்றது.
இக்கண்காட்சியில் 150 காட்சிக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதே போன்று 15 உயர்கல்வி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன அத்தோடு இருபது வெளிநாட்டு கம்பனிகள் நேரடியாக இக்கண்காட்சியில் பங்கு பற்றுவதுடன் தேசிய மட்டத்திலுள்ள அதிக கம்பனிகளும் இதில் பங்கு பற்றுகின்றன.
இவ்வர்த்தக கண்காட்சியில் தேசிய மற்றும் கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்ப மாவட்டத்தின் முக்கிய உள்ளூர் உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான இவ்வர்த்தக கண்காட்சியினை முதல் நாள் 7ம் திகதி வெள்ளிக்கிழமை பொருளாதா அபிவிருததி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இக் கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள் இலவசமாக பார்க்கமுடியும். கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு இரவும் இசை நிகழ்ச்சிகளை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியானது மட்டக்களப்பின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதுடன் தேசிய பொருளதார முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களிப்புச் செய்யுமெனக் கருதுகின்றோம் என அவர் தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கண்காட்சி நிறுவனத்தின் முகாமையாளர் ஹுஸைன் றஊப், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மற்றும் அதன் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment