Thursday, October 06, 2011உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் தேர்தல்கள் செயலகம் மேற்கொண்டிருப்பதாக செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சில புதிய நடைமுறைகளை செயற்படுத்துவதற்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி வாக்களிப்பு தினத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவென வைக்கப்படும் வாக்குப் பெட்டிகளினுள் ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
இவ்வாறு ஒட்டப்படும் ஸ்டிக்கர்களின் மாதிரிகளை வாக்குச்சாவடி தலைமை சிரேஷ்ட அலுவலகருக்கு வழங்குவது அவசியம் என்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
அதேவேளை, வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபடும் ஊழியர்கள் சிலரும் அரசியல் கட்சிகளின் முகவர்களும் கையெழுத்திட்ட ஆவணமொன்றை வாக்குப் பெட்டியில் ஒட்டி அனுப்புவதற்கும் அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
இவ்வாறு ஒட்டப்படும் கையொப்பம் இடப்பட்ட ஆவணப்பிரதியொன்று இலட்சனை பொறிக்கப்பட்டு கடித உறையொன்றினுள் வைத்து வாக்கெண்ணும் அலுவலருக்கு அனுப்பிவைக்கப்படும். அந்த அலுவலர் வாக்குப்பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் கையொப்பமிட்ட ஆவணத்தையும், இலச்சினை பொறிக்கப் பட்ட ஆவணத்தின் பிரதியையும் ஒப்பிட்டுப்பார்த்து வாக்குப்பெட்டிகளை உறுதிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறி அரசியல் கட்சி கள் பிரசாரத்தில் ஈடுபடுமாயின் தேர்தலை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கும் தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவுபெற்றுள்ளன. அதனால் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களையும், பதாதைகளையும், சுவரொட்டிகள், பனர் களையும் அப்புறப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் பொலிஸாரைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதேவேளை, 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் நீதியாகவும், நேர்மையாகவும் அமைதியாகவும் தேர் தலை நடத்துவதற்குத் தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன என்று தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
இந்தத் தேர்தல் 13 மாவட்டங்களிலுள்ள 50 பொலிஸ் பிரிவுகளில் நடைபெறுகின்றன. இத்தேர்தலை நீதியாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தும் சிலர் இதனை வன்முறை நிறைந்த தேர்தலாகக் காட்ட முயற்சிக்கின்றனர். இதில் எதுவித உண்மையுமே இல்லை. தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறிய செயல் மிகக்குறைவாக இடம்பெற்ற தேர்தலாக இத்தேர்தல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி நாளை மறுதினம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் 900 பிரதிநிதிகளை ஈடுபடுத்தவுள்ளதாகவும், இவர்களில் 800 பேர் தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடிகளுக்குள் இருந்தபடி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார். ஏனைய 100 பேர் 32 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நடமாடும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment