Wednesday, October 5, 2011

பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற புலிகளின் தற்கொலையாளிக்கும் மரண தண்டனை!.


Wednesday, October 05, 2011
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகளின் மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தி கொன்று, தானும் உடல் சிதறி உயிரிழந்த தனுவுக்கு உச்ச நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்ததாக தனது இணைய தளத்தில் இந்திய சிபிஐ தெரிவித்துள்ளமை அறியாமலா அல்லது உள்நோக்கத்துடனா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூரில் வைத்து, மனித வெடிகுண்டாக வந்த தேன்மொழி ராஜரத்தினம் என்கிற தனு என்ற இளம்பெண்ணால் கொல்லப்பட்டார் என்ற தகவல் உலகமே அறிந்த ஒன்று.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ, இவ்வழக்கில் தாங்கள் எவ்வாறு புலனாய்வு செய்து குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கி கொடுத்தோம் என்ற பெருமை தகவலை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில்தான் தனு மற்றும் மூன்று பேர்களுக்கு உச்ச நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்ததாக கூறப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவர்களது கருணை மனு குடியரசுத் தலைவரால் அண்மையில் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களை தூக்கில் போடும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில்தான், தமிழகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் தமிழக சட்டசபையில் அம்மூவருக்குமான மரணத்தண்டனையை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் நிறைவேற்றம் ஆகியவை அரங்கேறின.

அத்துடன் சென்னை உயர் நீதிமன்றமும் அம்மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தற்காலிக தடை விதித்து, மத்திய அரசுக்கு இது குறித்து பதிலளிக்க தாக்கீது அனுப்பியது.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெறத் தொடங்கிய நிலையில்தான், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, அப்போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் மேற்கூறிய மூவருக்கான கருணை மனுவை நிராகரிக்க செய்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் மேற்கூறிய மூவருக்குமான தண்டனை நிறுத்தி வைப்பையும், நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டியதையும் தனக்கு விடப்பட்ட சவாலாக கருதும் மத்திய காங்கிரஸ் அரசு, மூவரின் தூக்கு தண்டனை நியாயமானதுதான் என்ற விவாதத்தை காங்கிரஸ் அரசு முடிவு செய்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment