Wednesday, October 5, 2011

அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து!

Wednesday, October 05, 2011
ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எழுச்சி காணப்படுகிறது. மேலும், பாராளுமன்ற கூட்டத் தொடரில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக அன்னா ஹசாரே நேற்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, அரசியல் நடைமுறைகளின் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிராக போராட முடியும் என்றும் தனித்தனி இயக்கங்களால் எதுவும் சாதிக்க முடியாது என்றும் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு கூறாமல் பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

ஊழல் பற்றி மக்கள் பேசுகின்றனர். ஊழலுக்கு எதிராக நீங்கள் போராட விரும்பினால், அரசியல் நடைமுறைகளின் மூலமாக மட்டுமே அது சாத்தியமாகும். நாட்டில் உள்ள சாதாரண இளைஞர்களுக்கு எட்டாத இடத்தில் அரசியல் இருந்து வருகிறது. இது, மிகப்பெரிய பிரச்சினையாகும்.

நம்முடைய (காங்கிரஸ்) அமைப்புகளை ஜனநாயக ரீதியாக வலுப்படுத்தினால் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய நடவடிக்கையாக அமையும். பஞ்சாப், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகள் கூட, நம்முடைய தேர்தல் குறித்து எங்கேயும் குறை கூறவில்லை. எந்தவொரு மாநிலத்திலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை யாருக்கு வழங்கவில்லை. கட்சி தொண்டர்களே வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள ரோகிணி என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஜப்பானிஷ் பூங்காவில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, ரேஸ் கோர்ஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ரோகிணி மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மெட்ரோ ரெயிலில் ராகுல் பயணம் செய்தார்.

பின்னர், ஒரு வாடகை டாக்சியை பிடித்து கூட்டம் நடந்த இடத்தை சென்றடைந்தார். ராகுல் பயணம் செய்த டாக்சியின் டிரைவர் சரவண் கூறுகையில், "ரோகிணி நிலையம் வழியாக சென்றபோது ராகுல் கையை காட்டி என்னை நிறுத்தினார். ஜப்பானிஷ் பூங்கா வரை செல்ல வேண்டும் என கூறினார். அங்கு சென்றடைந்த பிறகு எனக்கு ராகுல் காந்தி ரூ.200 தந்தார்'' என்றார்.

No comments:

Post a Comment