Wednesday, October 5, 2011

புகைப்பிடிப்பதால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Wednesday, October 05, 2011
புகைப் பிடிப்பதால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக சர்வதேச ஆய்வொன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

புகைபிடித்தலால் ஏற்படும் காசநோய் காரணமாக சுமார் 40 மில்லியன் பேர் 2050 ஆம் ஆண்டுக்கு முன்னதாக உயிரிழக்கும் அபாயம் நிலவுகின்றமை குறித்த ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆபிரிக்கா, மத்திய தரைக்கடலை அண்மித்த நாடுகள் மற்றும் தென்கிழக்காசியா ஆகிய பிராந்தியங்களிலேயே காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் சில நாடுகளில் முன்னெடுத்துள்ள விரிவான சந்தைப்படுத்தல் திட்டங்களால் புகை பிடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னதாக உலக சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக காசநோயை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்திருந்ததாக பிரித்தானியாவின் மருத்துவ நிபுணர் டொக்டர் ஜோன் மூரே கில்லன் கூறியுள்ளார்.

இந்த பிரகடனத்தை அடுத்து, நாளுக்கு நாள் காச நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததேயொழிய குறைவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சர்வதேச புகையிலை நிறுவனங்கள் பல்வேறு நாடுகளிலும் மேற்கொண்டுவரும் விரிவான சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு திட்டங்களே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காச நோயில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான விரிவான செயற்றிட்டங்களை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment