Monday, October 31, 2011

தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது-கனடாவில் இரா சம்பந்தன்!

Monday, October 31, 2011
ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது என கனடா ஸ்காபுறோ கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

'தற்போதைய சூழ்நிலையில் எமது தாயகத் தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு உலகம் சார்ந்த பிரச்சனையாக கணிக்கப்படுகின்றது. அவர்கள் அந்த மண்ணில் படுகின்ற துன்பக் குரல் அல்லது அவர்கள் எழுப்புகின்ற அவலக் குரல் உலகின் காதுகளுக்கு கேட்கின்றது.

இதேவேளை தாயகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்களும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் உங்களைப் போன்ற உறவுகளும் நடத்திவரும் பல்வேறு வகையான போராட்டங்களும் சந்திப்புக்களுமே தற்போது சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எமது அவதானிப்பின்படி நமது ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டுவருகின்றது' என நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.10.11) இரவு கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள பீற்றர் அன்ட் போல் மாநாட்டு மண்டபத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிககப்பட்ட இராப்போசன விருந்தின்போது உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு கனடாவின் ஸ்காபுறோ நகருக்கு சென்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா என். ஏம். சுமந்திரன் ஆகியோர் நேற்று ஸ்காபுறோவில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினர். முதலில் ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தான விழா மண்டபத்தில் மேற்படி மூவரும் உரையாற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா. சம்பந்தன் சர்வதேசம் நமது பிரச்சனையை தீர்த்து வைக்க தயாராக உள்ள போது நமது நாட்டு ஜனாதிபதி அதற்கு விருப்பம் உள்ளவராகத் தெரியவில்லை. அவரது விரும்பத்தகாத நடவடிக்கைகளினால் அவர் பல இடங்களில் அவமானப்பட வேண்டியுள்ளது. உதாரணமான சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்த்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட கனடிய பிரதமரின் புறக்கணிப்புக்கு மகிந்தா இராஜபக்ச உள்ளாக வேண்டி வந்துவிட்டது. இது அவருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். கனடாவின் பிரதமர் ஏற்கெனவே பல விண்ணப்பங்களை இலங்கை அரசிற்கும் அதன் ஜனாதிபதிக்கும் விடுத்துள்ளார். ஆனால் அவைகளுக்கு தகுந்த பதில் தராத மகிந்த இராஜபக்சவின் உரைகளை தான் செவிமடுக்கப்போவதில்லை என்ற செய்தியையே கனடியப் பிரதமர் நமது ஜனாதிபதிக்கு தந்துள்ளார். எனவே இலங்கை அரசு உடனடியாக நமது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய ஒரு கடப்பாடு உள்ளது.

எனவே கடந்த காலங்களைப் போல நமது புலம் பெயர்ந்த உறவுகளாகிய நீங்கள் எதிர்காலத்திலும் நமது தாயக மக்களை பாதுகாக்கும் வகையில் இங்கு குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தீர்வுகள் பெற்ற ஒரு சமூகமான அந்த மண்ணில் நிம்மதியுடன் வாழ முடியும் என்றார்.

அங்கு மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோரும் உரையாற்றினார்கள். குகதாசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment