Monday, October 31, 2011

ஜ.தே.கூ தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மனம்!

Monday, October 31, 2011
காலியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதலுக்கு தலைமை வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் கைதுசெய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதியரசர்கள் நிமல் காமினி அமரதுங்க, சலீம் மர்சூக் மற்றும் ப்ரியசாத் டெப் ஆகியோர் முன்னிலையில் இது தொடர்பான மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு ஜனநாயக தேசியக் கூட்டமைப்பினால் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 12 அம் திகதி காலியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மனுதாரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகி விளக்கமளித்த சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன, சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறும், நாட்டின் சட்ட ஆதிக்கத்தை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தும் சுலோகங்களுடனும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாகவும் கூறினார்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்க முடியாது எனக்கூறி, பிரதிவாதிகள் அதற்கு இடையூறு விளைவித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் நிலவியதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.

மேலிட உத்தரவிற்கு அமைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிக்கு இடமளிக்க முடியாது எனத் தெரிவித்து பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

இதன் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கைதான ஐந்து பேரையும், பிணையில் விடுவித்ததுடன், வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி வெலியமுன நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், அஜித் குமார, அர்ஜூண ரணத்துங்க ஆகியோரும் மேலும் மூவரும் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

காலி பொலிஸ் அத்தியட்சகர், காலி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுவிலுள்ள விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் விசாரணைகளை 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment