Thursday, October 6, 2011

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் : பிரதமருடன் போராட்ட குழு நாளை சந்திப்பு!.

Thursday, October 06, 2011
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை சந்தித்து பேசுகின்றனர். இதற்காக, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவர்கள் இன்று மாலை டெல்லி செல்கின்றனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இங்கு மின் உற்பத்தி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அணுஉலையால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்த கூடங்குளம் பகுதி மக்கள், அணுஉலையை மூட வலியுறுத்தி, இடிந்தகரை கிராமத்தில் கடந்த 11-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்தது.

லட்சக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். இதையடுத்து, போராட்ட குழுவினரை சென்னைக்கு அழைத்து பேசினார் முதல்வர் ஜெயலலிதா. அந்த பேச்சுவார்த்தையின்போது, கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதாகவும், அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழுவினர் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் முதல்வர் உறுதி அளித்தார். அதை ஏற்று, 22-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

அதே நாளில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில் கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவதற்கு தமிழக அரசு ஆதரவு கொடுத்துள்ளதாகவும், அடுத்தகட்ட போராட்டம் மத்திய அரசை எதிர்த்துதான் இருக்க வேண்டும் என்றும் போராட்டக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், 7-ம் தேதி (நாளை) பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கூடங்குளத்தில் இருந்து 13 பேர் கொண்ட குழுவினர் சென்னை வந்துள்ளனர். அவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 6.10 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த குழுவினர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை சந்தித்து பேசுகின்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள போராட்ட குழு தலைவர் உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தால் அவரை சந்தித்து பேசுவோம். இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறோம். பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை சந்தித்து பேச உள்ளோம். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை கைவிட வற்புறுத்துவோம். பிரதமர் அளிக்கும் பதிலை கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதி மக்களிடம் எடுத்துரைப்போம். அதன்பிறகு அடுத்தகட்ட திட்டம் குறித்தும் முடிவு செய்வோம்.

No comments:

Post a Comment