Wednesday, October 5, 2011

அரசியல் தீர்வு என்று ஒன்று எட்டப்படுமானால் முஸ்லீம் மக்களை புறந்தள்ளிவிட்டு நாம் அரசியல் தீர்வை நோக்கி செல்ல போவதில்லை–சம்பந்தன்!

Wednesday, October 05, 2011
அரசியல் தீர்வு என்று ஒன்று எட்டப்படுமானால் அது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முயற்சியாக இருக்கும் என தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கல்முனை மாநகரசபை தேர்தல் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் பொதுவான அக்கறைகளான எமது தனித்துவம், எமது பாதுகாப்பு, பிரதேச வளங்கள் மற்றும் எமது பொருளாதார, சமூக, கலாசார நலன்களைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இலக்குகளை அடைவதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரா.சம்பந்தன் இன்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இலங்கைத்தமிழரசுக்கட்சி சின்னத்தில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் பலம் எமக்கு இல்லாமல் இருப்பினும் இப்பிரதேச மக்களின் நலன்களுக்காக பயன்தரமிக்க பங்களிப்பை வழங்கமுடியும் என்பதை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதைத் தேர்தல் மூலம் தெரியப்படுத்தலாம். மேலும் தமிழ் வாக்காளர்கள் ஒன்றுபட்டு நின்று நாங்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு-இலங்கைத்தமிழரசுக்கட்சியின் கொள்கைகளை ஒருமனதாக ஆதரிக்கின்றோம் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும்.

யுத்தம் மற்றும் பேரழிவிற்குப்பின்னர் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக்காண வேண்டும் என்ற தேவை பொருத்தமான இடங்களில் வழமைக்கு மாறான முக்கியத்வத்துடன் உருவாகியுள்ளது.

நாட்டின் எதிர்கால நலன் குறித்த ஏனைய முக்கிய பிரச்சினைகள் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காணுவதுடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.

ஜனநாயகம், அடிப்படை மனித உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் தான் இவற்றை அடையலாம்.

தமிழ் மக்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது மேற்கூறப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் வாக்குகளை அளிக்கும்போதுதான் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதான தீர்வைக் காணக்கூடியதாக இருக்கும். அத்துடன்
அவர்களுக்கு சமமான பிரசைகள் என்ற அந்தஸ்தை வழங்குவதாகவும் அது அமையும்.

தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை உருவாக்குமுகமாக அரசாங்கம் தமிழ்த் தேசியக்;கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது,

தமிழ் மக்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் உள்ளுராட்சித் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் தமிழத்தேசியக்கூட்டமைப்புக்கு பலமான ஆதரவை நல்கியதுடன் தங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை பேச்சுவார்த்தை மூலம் காணும்படி
தெளிவான ஜனநாயக ஆணையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுமுள்ளனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இப்பணியை செய்து முடிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளது.

இப்பணியைச் செய்து முடிப்பதற்கான பலத்தை தமிழ் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு மீண்டும் உறுதிப்படுத்தி வெளிக்காட்டுவது கட்டாயமானதாகும்.

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானதும் நியாயமானதும் நேர்மையானதுமான தீர்வு ஒன்றைக் காணுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.

முஸ்லிம் சகோதரர்களின் அக்கறைகள் குறித்து நாம் குறிப்பாக கரிசனை கொண்டுள்ளோம். காணப்படும் அரசியல் தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே எமது முயற்சியாக இருக்கும்.

சிங்கள சகோதரர்களின் நியாயமான உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையாது

வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் பொதுவான அக்கறைகளான எமது தனித்துவம், எமது பாதுகாப்பு, பிரதேச வளங்கள் மற்றும் எமது பொருளாதார, சமூக, கலாசார நலன்களைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இலக்குகளை அடைவதற்கு நாம்-தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

இந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும் நாள் விரைவில் வந்தேயாகும்.

எதிர்வரும் கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்று மக்களை நாம் வேண்டுகின்றோம்.

இரா.சம்பந்தன்,
தலைவர், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு-
தலைவர், இலங்கைத்தமிழரசுக்கட்சி

No comments:

Post a Comment