Sunday, October 30, 2011மண்டபம் : இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற இருவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல்பகுதியில், கண்காணிப்புப் பணி இருந்தாலும், மழையால் ரோந்து பணி மந்தம் அடைந்துள்ளது. இதனால், சட்ட விரோதச் செயல்கள் தொடருகின்றன. நேற்று முன் தினம் இரவு மரைன் போலீசார், ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஜெட்டி பகுதியில் பதுங்கியிருந்த இருவரைப் பிடித்து, விசாரணை செய்தனர். இலங்கை ராஜகிரி பகுதியைச் சேர்ந்த சின்னையா ரவீந்திரன்,44, கொழும்புவை சேர்ந்த திசவெலிசலா,53என தெரிய வந்தது. இருவரும், மதுரை புரோக்கர் மூலம், ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில், இலங்கைக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டது தெரியவந்தது.
இது குறித்து, சின்னையா கூறியதாவது: வியாபாரியான நான், விமானம் மூலம் இந்தியாவிற்கு, எட்டு மாதங்களுக்கு முன் வந்தேன். சென்னையில் தங்கியிருந்த போது, பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. இதனால், படகு மூலம் இலங்கைக்குச் செல்லத் திட்டமிட்டேன். இலங்கையில் உள்ள புரோக்கரிடம் யோசனை கேட்டதற்கு, மதுரை புரோக்கரை சந்திக்கச் சொன்னார்.
ராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகு மூலம், இலங்கைக்குச் செல்லுங்கள்' என, மதுரை புரோக்கர் கூறினார். அதன்படி, ராமேஸ்வரம் வந்தேன். மழை பெய்ததால், கரையில் ஒதுங்கியிருந்த நேரத்தில், போலீசார் எங்களைப் பிடித்தனர். இவ்வாறு, சின்னையா கூறினார்.
பிடிபட்ட இருவரையும் கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment