Monday, October 10, 2011

சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராக உள்ள ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்!.

Monday, October 10, 2011
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில் ஆஜராக உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அறிக்கையை 17-ம் தேதி கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கோர்ட் உத்தரவுகளையடுத்து வரும் 20-ம் தேதி நேரில் ஆஜராவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். அன்றைய தினத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிக்கையை 10-ம் தேதி (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பெங்களூர் போலீஸ் இணை கமிஷனர் ஜி.ரமேஷ் கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை. அரசு வக்கீல் ஆச்சார்யா ஆஜராகி, ‘‘பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கர்நாடக அரசு, ஐகோர்ட் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை இடம் தேர்வு செய்ய முடியவில்லை. இதுதொடர்பான அறிக்கையை வரும் 17-ம் தேதி தாக்கல் செய்கிறோம். அதுவரை கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.

அதைக் கேட்ட நீதிபதி, ‘‘ஜெயலலிதா ஆஜராகவுள்ள 20-ம் தேதிக்கும் 17-ம் தேதிக்கும் இருக்கும் நேரம் மிகவும் குறுகிய காலமாக இருக்கிறது. அதற்குள் இடம் தேர்வு செய்து முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே அறிக்கை கொடுங்கள்’’ என்றார். அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், ‘‘முழு பாதுகாப்பு அளிக்க தயார் நிலையில் இருக்கிறோம். அதுபற்றி முடிவு எடுக்கத்தான் 17-ம் தேதி வரை அவகாசம் வேண்டும்’’ என கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘வரும் 17-ம் தேதி அறிக்கையை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment