Monday, October 10, 2011

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை ஐகோர்ட்டில் இன்று முதல் பாதுகாப்பு; வக்கீல்கள்-பொதுமக்களுக்கு கட்டுப்பாடு!

Monday, October 10, 2011
சென்னை:டெல்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை ஐகோர்ட்டிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

இதன் ஒரு பகுதியாக ஐகோர்ட்டில் உள்ள பிரதான நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் ஒவ்வொரு வாயிலிலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஐகோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள் அடையாள அட்டைகளை காட்டிய பின்னர் உள்ளே அனுமதிக்கப் பட்டனர். உரிய அடையாள சான்றிதழ் வைத்திருந்த பொதுமக்கள் மட்டுமே ஐகோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஐகோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களும் போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. ஐகோர்ட்டு வளாகத்துக்குள் வக்கீல்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், கோர்ட் ஊழியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டனர். இந்த பாதுகாப்பு ஏற்பாட் டினால் கோர்ட் வளாகத்தில் நிலவி வந்த வாகன நெரிசல் முற்றிலும் குறைந்துள்ளது.

இந்த ஏற்பாட்டினால் தேவையற்ற வாகனங்கள் மற்றும் வெளிநபர்களின் வருகை முற்றிலும் தடுக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு வக்கீல்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment