Thursday, October 13, 2011

கூடங்குளத்தில் அணு உலை பணிக்கு சென்றவர்களை மறித்து அடையாள அட்டைகளை பறிக்க முயற்சி!.

Thursday, October 13, 2011
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. அணுஉலை பகுதிக்கு சென்ற பணியாளர்களை வழி மறித்து அடையாள அட்டைகளை பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைகளை மூடக்கோரி இடிந்தகரையில் கடந்த மாதம் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு ஏற்பாட்டின்படி, போராட்ட குழுவினரும் அமைச்சர் தலைமையிலான ஒரு குழுவினரும் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர்.

அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பிரதமரிடம் போராட்ட குழுவினர் வலியுறுத்தினர். மத்திய அரசு தரப்பில் அதற்கான எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. மேலும், கூடங்குளம் அணுமின் திட்டம் நிறுத்தப்பட்டால், தமிழகத்தில் பெரும் மின் பற்றாக்குறை ஏற்படும் என்றும் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் கடிதம் எழுதினார். இதற்கிடையே, அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் 2-ம் கட்டமாக கடந்த 9-ம் தேதி முதல் இடிந்தகரையில் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.

நேற்று 4-வது நாளாக 106 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். மேலும் கூடங்குளம் அரசு பள்ளி முன்பு நின்று அணுமின்நிலையத்துக்கு வேலைக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று 5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அணு உலை எதிர்ப்பாளர்கள் கூடங்குளம் எஸ்.எஸ்.புரத்தில் திரண்டனர். அந்த வழியாக அணுமின் நிலையத்துக்கு வேலைக்கு செல்லும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை வழிமறித்து நிறுத்தினர்.

செட்டிகுளம் - கூடங்குளம் கடற்கரை சாலை வழியாக ஒப்பந்த பணியாளர்கள் சிலர் கார் மற்றும் பைக்கில் வேலைக்கு செல்வதாக போராட்டக்காரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.புரத்தில் திரண்டிருந்த மக்கள் கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். ஒப்பந்த பணியாளர்களை வழிமறித்து ‘நாங்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வேலைக்கு போவதா?’ என்று கேட்டு திருப்பி அனுப்பினர். அவர்களின் அடையாள அட்டையை சிலர் பறிக்க முயன்றனர்.

ஒரேநேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. அணுமின் நிலைய மெயின் கேட் அருகிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு வழிபாடு

இதற்கிடையே, இன்று 5-வது நாளாக போராட்டத்தை தொடரும் மக்கள், கூடங்குளம் அணுஉலைகளை மூடக்கோரி இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் 500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ‘இனி அரசாங்கத்தை நம்புவதைவிட கடவுளை நம்புவதே மேல்’ என்று அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment