Saturday, October 29, 2011

கூடங்குளம் பணிகளை நிறுத்தினால் பெரும் ஆபத்து : அணுசக்தி கழக தலைவர் எச்சரிக்கை!

Saturday, October 29, 2011
மீனம்பாக்கம் : கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை திடீரென நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று இந்திய அணுசக்தி கழக தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி எச்சரித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி இன்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. அதில் யுரேனியம் நிரப்பப்பட்டு மின் உற்பத்திக்கான ஒத்திகை நடந்துகொண்டு இருக்கிறது. அத்துடன் உயரழுத்த மின் இணைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் திடீரென வேலைகளை நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும். இதனால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அணு உலை பணிகளை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை. அணு உலை பணிக்கு செல்லும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது சரியான செயல் அல்ல. கூடங்குளம் அணு உலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, பணிக்கு செல்பவர்களை தடுக்கக்கூடாது. இவ்வாறு குமார் பானர்ஜி கூறினார். தொடர்ந்து நிருபர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment