Saturday, October 29, 2011

3ஆம் இணைப்பு--ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ராஜிவ் கொலை கைதிகள் 3 பேர் மனு!

Saturday, October 29, 2011
சென்னை : "முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுளாக குறைக்கக் கோரி, மூவர் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்' என, சென்னை ஐகோர்ட்டில் மத்திய, மாநில அரசுகள் கோரியுள்ளன. இவ்வழக்கு விசாரணை, நவ., 29 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினிக்கு ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின், நளினிக்கு மட்டும் ஆயுளாக குறைக்கப்பட்டது. மூவரின் கருணை மனுக்களையும், ஜனாதிபதி, கடந்த ஆகஸ்ட் மாதம் நிராகரித்தார். இதையடுத்து மூவருக்கும், செப்., 9 ல், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும், அதுவரை தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும், மூவரும், தனித்தனியே, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கருணை மனு, 11 ஆண்டுகள் நான்கு மாதங்கள் ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்தது என்றும், முடிவெடுக்க நீண்ட கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், மனுக்களில் கூறப்பட்டுள்ளது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' தூக்குத் தண்டனையை நிறைவேற்ற, இடைக்காலத் தடை விதித்தது. மனுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இம்மனுக்கள், நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், அரசு பிளீடர் வெங்கடேஷ், பதில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவில், "வெளி மாநிலத்துக்கு இந்த வழக்கை மாற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது என்றும், அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது என்றும், எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இருதரப்பு வழக்கறிஞர்களும் கேட்டுக் கொண்டபடி, வழக்கு விசாரணை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் (ஜுடிஷியல்) தாக்கல் செய்த பதில் மனு: புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஊழியராக செயல்படுபவர் பேரறிவாளன். ராஜிவ்காந்தியை கொல்லும் நோக்கில் இந்தியாவுக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தனுடன் ஒவ்வொரு கட்டத்திலும் பேரறிவாளன் பங்கேற்றுள்ளார். அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உதவியுள்ளார்.

மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, கருணை மனுக்களை ஜனாதிபதிக்கு அனுப்பினர். மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில், கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார். வாழ்வதற்கான உரிமையை மனுதாரர்கள் கோரியுள்ளனர். அப்படியென்றால், மற்றவர்களின் உயிர்களை அவர்கள் பறித்திருக்கக் கூடாது. இவர்களின் நடவடிக்கையால், முன்னாள் பிரதமர் ராஜிவ் மற்றும் 15 பேர் இறந்துள்ளனர்; 43 பேர் காயமடைந்தனர்.

முன்னாள் நீதிபதிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அரசுக்கு கடிதம் அனுப்பியதற்காக, ஆயுள் தண்டனையாக குறைக்க, அதை ஒரு முகாந்திரமாக பரிசீலிக்க முடியாது. இதை ஒரு முகாந்திரமாக பரிசீலித்தால், அது மோசமான முன்னுதாரணமாகி விடும்.

சொந்த நலனுக்காக சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், புலிகள் இயக்கத்தை ஆதரிக்கின்றனர். அரசியல் ஆதாயம் தேடும் வகையில், மனுதாரர்களுக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்க, அவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம், மற்றவர்களும் இதே குற்றங்களைச் செய்யாமல் தடுக்கப்படுவர். இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளில் இணைந்து செயல்படுவது தடுக்கப்படும். தடா கோர்ட் அளித்த தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மறு ஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

கருணை மனுவை கால தாமதமாக பைசல் செய்வதால், தண்டனையை குறைக்க அதை ஒரு முகாந்திரமாக கொள்ள முடியாது. ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை யாரும் பறித்து விட முடியாது. அவருக்கு உள்ள அதிகாரமானது விசேஷமானது. ஜனாதிபதிக்கு கால அவகாசம் நிர்ணயிக்க முடியாது. எனவே, இத்தனை கால அவகாசத்துக்குள் கருணை மனுவை பைசல் செய்ய வேண்டும் என இல்லை.

மற்ற சிறைவாசிகள் போல் மனுதாரர்களும் சகஜமான வாழ்வை வாழ்கின்றனர். கல்வி, இலக்கியம், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். சிறையில் நல்ல முறையில் மனுதாரர்கள் நடந்து கொண்டாலும் கூட, கொடூரமான குற்றத்தை அவர்கள் செய்துள்ளனர் என்ற உண்மையை மறைத்து விட முடியாது.

மனுதாரர்கள் தூக்கு தண்டனை பெற தகுதியுடையவர்கள். கருணை மனுக்களை பைசல் செய்வதற்கு முன், போதிய ஆவணங்களை ஜனாதிபதி பரிசீலித்துள்ளார். ஜனாதிபதியின் முடிவு தன்னிச்சையானது அல்ல. குற்றவாளிகளுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மூவரின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களிலும் கூறப்பட்டுள்ளது.

சொல்வதற்கு ஒன்றுமில்லை: தமிழக அரசு பதில் : ராஜிவ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரிய மனுக்களில் கூறப்பட்ட விஷயங்களுக்கு, கருத்துக் கூற தங்களிடம் எதுவும் இல்லை என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுளாகக் குறைக்கக் கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் தனித்தனியே, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள், மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்பதால், அதுபற்றி கருத்துக் கூற தங்களிடம் எதுவும் இல்லை என, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடைசியில், மனுதாரர்களின் மனுக்களை, தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

மனு நிலுவையில் இருந்ததால் அவர்கள் வாழ்கின்றனர் : "கருணை மனு நிலுவையில் இருந்ததால் தான், மனுதாரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்' என, மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: தங்களின் வழக்குகளை எதிர்கொள்வதற்காக, கணிசமான பணத்தை குற்றவாளிகளால் செலவு செய்ய முடிகிறது. முருகனின் மகள் லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்கள் இருளில் இருக்கின்றன. இறந்தவர்களில் பெரும்பாலோர் போலீஸ் அதிகாரிகள். பொது மக்கள் சிலரும் இறந்தனர். அவர்களை நம்பித் தான் குடும்பம் உள்ளது.

நீண்ட தாமதம் செய்யாமல், கருணை மனுக்களின் மீது முடிவெடுக்க வேண்டும் என, மனுதாரர்கள் கோருகின்றனர். மனுதாரர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டால், உடனடியாக அவர்களைத் தூக்கிலிட வேண்டியிருக்கும். கருணை மனுக்கள் நிலுவையில் இருந்ததால் தான், அவர்களால் உயிரோடு இருக்க முடிகிறது.

கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டாலும் கூட, அவர்கள் சுதந்திரமாக வெளியில் வந்து விட முடியாது. குற்றவியல் நடைமுறை சட்டப்படி, உத்தரவு பிறப்பித்தால் ஒழிய, உயிரோடு இருக்கும் வரை, சிறையில் தான் இருக்க வேண்டும்.

எனவே, சிறையில் இருப்பவரைப் பொறுத்தவரை, தனது கருணை மனு ஏற்கப்பட வேண்டும் என விரும்புவார். உடனடியாக ஏற்கப்படவில்லை என்றாலும், முடிந்த வரையில் நிலுவையில் இருக்க வேண்டும் என விரும்புவார். அது நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை விரும்ப மாட்டார். எனவே, கருணை மனு நிலுவையில் இருப்பதை, கொடூரமான செயல் என கூற முடியாது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment