Friday, October 28, 2011

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது இந்திய பிரச்னை இல்லையா?:அத்வானி!

Friday, October 28, 2011
மதுரை : இலங்கை ராணுவம், கடற்படை, போலீசாரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை மத்திய அரசு தமிழகத்துக்கு மட்டுமே உரிய பிரச்னையாக கருத கூடாது. நாட்டின் பாதுகாப்பு பிரச்னையாக கருதி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜ தலைவர் அத்வானி தெரிவித்தார். பாஜ மூத்த தலைவர் அத்வானி மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஊழலை எதிர்த்தும் கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தியும் பாஜ சார்பில் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை நடத்தப்படுகிறது.

இன்று மதுரையில் இருந்து மீண்டும் யாத்திரை துவங்கி கேரளா செல்கிறது. மிகப்பெரிய ஊழல்களில் ஆளும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. ஆனால், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர். ஊழலில் தொடர்புள்ள காங்கிரசாரையும் கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும்.

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அறிக்கைபடி எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு லோக் ஆயுக்தா வரவேண்டுமென போராடியதே பாஜதான். ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கருணை காட்ட மாட்டோம். கூடங்குளம் அணுமின் திட்டத்தை வர்த்தக ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே அணுகாமல், மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஆய்வு செய்ய வேண்டும்.

நாடாளுமன்றம் மீது தாக்குதல், தேச தலைவர்களை கொலை செய்தவர்களுக்கு கருணை காட்ட கூடாது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம், கடற்படை, போலீசார் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னையை தமிழகத்துக்கு மட்டுமே உரிய பிரச்னையாக மத்திய அரசு கருத கூடாது.

நாட்டின் பாதுகாப்பு பிரச்னையாக கருதி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது பாஜ தேசிய பொது செயலாளர் ரவிசங்கர் பிரசாத், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சுகுமாறன் நம்பியார், எச்.ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் உள்ளிட்ட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment