Monday, October 31, 2011

சென்னை தி.நகரில் பிரபலமான 25 கடைகளுக்கு சீல்!.

Monday, October 31, 2011
சென்னை: சென்னை தி.நகரில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக கூறி பிரபலமான 25 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நகரின் வர்த்தக பகுதியாக விளங்குவது தி.நகர். இங்குள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் நூற்றுக்கணக்கான ஜவுளி மற்றும் நகைக்கடைகள் உள்ளன. சாதாரண நாட்களிலேயே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு ஷாப்பிங் செய்ய வருவார்கள்.

பண்டிகை நாட்களில் சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க வந்து செல்வர். இதனால், தி.நகரில் எந்நேரமும் மக்கள் கூட்டம் அலைமோதும். போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். தி.நகரில் உள்ள பெரும்பாலான கடைகள், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், பல கடைகள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் மாநகராட்சி அனுமதி பெறாமல் நடத்தப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் எழுந்தன. அதிலும் ஜவுளிக்கடைகள் மீதான புகார்கள்தான் அதிகம்.

புகார் வந்த கடைகளின் கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சிஎம்டிஏ சார்பிலும் மாநகராட்சி சார்பிலும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. அதன்பிறகும் அவர்கள் முறையான அனுமதியை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை 6 மணிக்கு தி.நகர் வந்தனர். அவர்கள் தலைமையில் 15 கார்களில் 100-க்கும் அதிகமான ஊழியர்களும் வந்தனர். தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

உஸ்மான் சாலை, ரங்கநாதன் சாலையில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைக்கத் தொடங்கினர். உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை, பாலு ஜுவல்லர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் மற்றும் நகைக்கடை ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டன. ரங்கநாதன் தெருவில் ரத்னா ஸ்டோர்ஸ், டெக்ஸ்டைல் இன்டியா, சரவணா இனிப்பகம், சண்முகம் டெக்ஸ்டைல்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், அன்பழகன் பழக்கடை, அர்ச்சனா ஸ்வீட்ஸ், மாடர்ன் டிரேடர்ஸ், ஹாட் மெயில்ஸ், அம்பிகா அப்பளம், பேஷன் இன்டியா, ராயல் புட்வேர், மாடர்ன் டிரேடர்ஸ், ஸ்ரீராம் மருந்தகம், சாம்சனைட் பேக், நேஷனல் பாஸ்ட் புட், லெதர் பேலஸ், எஸ்மிஸ் (நகைக்கடை), ஸ்ரீதேவி கோல்டு கவரிங் உள்பட 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

காலையில் கடைக்கு வந்த உரிமையாளர்களும் ஊழியர்களும் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கடைக்கு வந்த பொதுமக்களும் வெளியிலேயே நின்றிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கடையின் உரிமையாளர்கள், ஊழியர்கள் வந்தனர். அதிகாரிகளிடம் கடை உரிமையாளர்கள் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ‘சீல் வைத்தது வைத்ததுதான். நீங்கள் வேண்டுமானால் கோர்ட்டுக்கு செல்லுங்கள்’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

சிஎம்டிஏ அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த 7 கடைகளில், 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஒரு கடை உரிமையாளர் கோர்ட்டில் தடை வாங்கியிருந்ததால் அங்கு மட்டும் சீல் வைக்கவில்லை. அதேபோல மாநகராட்சி அனுமதி பெறாத 21 கடைகளில் 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 2 கடைகள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றிருந்தன. அதிகாரிகள் தொடர்ந்து சீல் வைத்துக் கொண்டிருந்ததால் மற்ற கடைகளும் திறக்கப்படவில்லை. நம் கடைக்கும் சீல் வைக்கப்படலாம் என்ற பயத்தில் அவர்கள் திறக்காமல் இருந்தனர்.

No comments:

Post a Comment