Friday, October 21, 2011

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நினைத்தால் 24 மணி நேரத்திற்குள் தீர்வு வழங்க முடியும்-TNA!

Friday, October 21, 2011
வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நினைத்தால் 24 மணி நேரத்திற்குள் தீர்வு வழங்க முடியும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத் தரப்பிடம் இன்று தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே இன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலின் போது,

1. வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணிப் பதிவு நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. வெலிஓயா சிங்களக் குடியேற்றம் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

3. மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபர் நியமிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்.

4. வலி.வடக்கு, சம்பூர் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த உடனடியாக வழிவகுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இப்பேச்சுவார்த்தையின் போது, அரச தரப்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், சஜீன் வாஸ் குணவர்த்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் கனகஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகளை கேட்டறிந்த அரச தரப்பினர் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment