Monday, October 24, 2011

11 நாட்களுக்கு பிறகு கூடங்குளத்தில் பணி துவங்கியது!

Monday, October 24, 2011
வள்ளியூர் : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 11 தினங்களுக்கு பின்னர் இன்று அலுவலக பணிகள் துவங்கின. கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி 3வது கட்டமாக இடிந்தகரையில் இன்று 7வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் கடந்த 13ம் தேதி முதல் முற்றுகை போராட்டம் நடந்ததால், ஒப்பந்தகாரர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை.
இந்நிலையில் இன்று காலையில் அணுவிஜய்நகரியத்தில் இந்திய அணுமின் கழக ஊழியர்கள் மொத்தமாக குவிய துவங்கினர். கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, முதன்மை கட்டுமான பொறியாளர் ஜின்னா, மனிதவள மேம்பாட்டு துணை பொதுமேலாளர் செல்லப்பா, மேலாளர் அன்புமணி ஆகியோர் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் பாதுகாப்போடு அதிகாரிகள் ஒரு வேனிலும், 7 பஸ்களில் அணுமின் நிலைய கழக ஊழியர்களும் பணிக்கு சென்றனர். இதனால் அணுமின் நிலைய பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அணுமின் நிலையத்தில் அலுவலக பணிகள் மட்டுமே இன்று நடைபெற உள்ளது. ஒப்பந்த பணியாளர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. அணுமின்நிலையத்தில் உள்ள ஒன்று மற்றும் இரண்டு அணு உலைக்கான பராமரிப்பு பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறாது. இப்பணிகளை துவக்க 3 மாதமாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment