Tuesday, October 25, 2011

சென்னை மேயர் சைதை துரைசாமி உள்பட 10 மேயர்களும் பதவியேற்றனர்!

Tuesday, October 25, 2011
கொட்டும் மழையில் ஜெயலலிதா, அமைச்சர்கள் பங்கேற்பு
* தமிழகம் முழுக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 10 மாநகராட்சி மேயர்கள், 125 நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னையில் கொட்டும் மழையின் நடுவே நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 759 உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 10 மாநகராட்சி மேயர் பதவிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர்களுக்கான தேர்தலில் 89 இடங்களில் அதிமுகவும் 23 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றது. அதேபோல் மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்களுக்கான பதவிகளையும் பெருமளவில் அதிமுகவினரே கைப்பற்றினர்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அனைவரும் இன்று காலை 11 மணி முதல் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அந்தந்த மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி ஆணையர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
சென்னை மாநகராட்சியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது. இதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் ரிப்பன் மாளிகை இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கடந்த 3 நாட்களாக பதவியேற்பு விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் முன்னின்று செய்து இருந்தனர். தற்போது ரிப்பன் மாளிகை கட்டிடம் புனரமைக்கப்பட்டு வருவதால் எங்கு பார்த்தாலும் குப்பையும், கட்டிட இடிபாடுகளும் குவிந்து கிடந்தது. தேங்கி கிடந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. புதிதாக பெயின்ட் அடித்து ரிப்பன் மாளிகையை அலங்கரித்திருந்தனர்.
சென்னை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முதல்வர் ஜெயலலிதா வருகை தந்ததால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். பதவியேற்பு விழா நடைபெறும் மன்ற கட்டிடத்திற்குள் அதிகம் பேர் அமர முடியாது என்பதால் அரசியல் பிரமுகர்கள் அமர்வதற்காக ரிப்பன் மாளிகையின் முன்பகுதியில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. மேலும் அங்குள்ள சில அறைகளில் கட்சியினர் அமர்ந்து விழாவை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறைகளில் டிவி மூலம் விழா நிகழ்ச்சியை பார்க்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.
விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா சரியாக காலை 10.50 மணிக்கு ரிப்பன் மாளிகை வந்தார். அவரை மேயர் சைதை துரைசாமி மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சரியாக காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நிகழ்ச்சி துவங்கியது. சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சைதை துரைசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வெள்ளி செங்கோலை மேயர் துரைசாமியிடம் கமிஷனர் வழங்கினார். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவிடம் மேயர் துரைசாமி ஆசி பெற்றார். இதையடுத்து சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கவுன்சிலர்களும் வரிசையாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் கமிஷனர் கார்த்திகேயன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதேபோன்று கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

‘அம்மாவின் ஆணைக்கிணங்கÕ

சைதை துரைசாமி பதவியேற்ற பின்னர் கவுன்சிலர்கள் வரிசையாக பதவியேற்றனர். 2வது வார்டு கவுன்சிலர் செல்வம் பதவியேற்கும்போது, ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று கூறி பதவியேற்றார். ‘கடவுள் அறிய’ என்று சொல்லி பதவியேற்குமாறு அவருக்கு ஜெயலலிதா அறிவுரை கூறினார். இதையடுத்து அந்த கவுன்சிலர் மீண்டும் ஒரு முறை உறுதிமொழி வாசித்து பின்னர் பதவியேற்றார். 6 கவுன்சிலர்கள் மட்டுமே பதவியேற்றுக் கொண்ட நிலையில், ஜெயலலிதா கிளம்பி விட்டார். அவரை வழியனுப்புவதற்காக 15 நிமிடங்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. பின்னர் மற்ற கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழா துளிகள்...

* சென்னையில் இன்று காலையில் இடியுடன் பலத்த மழை பெய்தது. ஆனாலும், கொட்டும் மழையில் பல்வேறு பகுதியில் இருந்தும் மேயர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, அழைப்பிதழ் பெற்றவர்கள் திரண்டு வந்திருந்தனர்.
* சபாநாயகர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
* பதவியேற்கும் நிகழ்ச்சியை காண ரிப்பன் மாளிகைக்கு எதிரே உள்ள புல் வெளியில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தது.
* நிகழ்ச்சியை பார்வையாளர்கள் காண வசதியாக, பிரமாண்டமான டிஜிட்டல் திரை வைக்கப்பட்டிருந்தது.
* பதவியேற்பு விழாவையொட்டி மன்ற கூடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதுபோலவே ரிப்பன் மாளிகை போர்டிகோவில் இருந்து இரண்டாம் தளத்தில் உள்ள மன்ற கூடம் வரை உள்ள படிக்கட்டுகள் முழுவதும் அழகுபடுத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
* மேயர் பதவியேற்பின்போது, ஜெயலலிதா இருந்ததால் திமுக சார்பில் வெற்றி பெற்ற 24 கவுன்சிலர்களில் ஒருவர்கூட உள்ளே வரவில்லை. நிகழ்ச்சியை முடித்து விட்டு ஜெயலலிதா கிளம்பிய பிறகு, மீண்டும் 11.15 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
* புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு சிறப்பு பேட்ஜ் வழங்கப்பட்டது.
* மன்ற கூடத்தில் அமர்ந்திருந்த கவுன்சிலர்களிடம், ரிப்பன் மாளிகை மன்ற செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்கினர்.

No comments:

Post a Comment