Thursday, September 29, 2011

பாராளுமன்ற தெரிவுக்குழு விடயத்தில் TNAயின் நிலைப்பாட்டுக்கு ஏற்ற வகையில் செயற்படுவோம்-ரணில் விக்ரமசிங்க!

Thursday,September, 29, 2011
கொழும்பு:இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்தினால் அமைக்கப்படவிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு ஏற்ற வகையில் நாங்களும் செயற்படுவோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுமாயின் நாங்களும் அதில் பங்குபற்றுவோம் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைத்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு காண வேண்டியுள்ளது. அவ்வாறு தீர்வு காணாவிடின் அடுத்த வருட ஆரம்பத்தில் சர்வதேச மட்டத்தில் பல நெருக்கடிகளுக்கு நாங்கள் முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் தமிழ்க் கூட்டமைப்பு தமது யோசனைகளை ஆளும் கட்சிக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியும் தமது யோசனைகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கிய தேசிய கட்சி பேச்சு நடத்தியுள்ளது. அதனடிப்படையில் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

அதாவது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான தீர்மானத்தை எடுக்கின்றதோ? அதற்கேற்ப நாங்களும் செயற்படுவோம். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்தால் நாங்களும் பங்குகொள்வோம்.

இதேவேளை, சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் நாம் ஆராய்ந்து செயற்பட வேண்டும்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் மற்றும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன் வைத்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு அரசாங்கம் விரைவாக தீர்வுகாண வேண்டியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டியது அவசியமாகும்.

இந்த விடயங்களில் அரசாங்கம் விரைவாக தீர்வு காணாவிடின் அடுத்த வருட ஆரம்பத்தில் சர்வதேச மட்டத்தில் பல நெருக்கடிகளுக்கு நாங்கள் முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். எனவே இந்த விடயங்களுக்கு விரைவில் தீர்வு காணுமாறு நாங்களும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறோம் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment