Thursday,September, 29, 2011கொழும்பு:கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் பின்னணியில் இந்தியாவின றோ உளவுப் பிரிவு செயற்பட்டு வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
றோ உளவுப் பிரிவின் தூண்டுதல்களினால் ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுவினர் கட்சிக்கு எதிராக செயற்பட்டு வருவதாக சோமவன்ச தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுவினரை றோ அல்லது வெறும் வெளிநாட்டு உளவுப் பிரிவினர் வழி நடத்துகின்றனரா என்பது குறித்து விசாரணை செய்ய உள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை ஜே.வி.பி தொடர்ச்சியாக எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக றோ உளவுப் பிரிவு கட்சியில் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சி அல்லது அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு கூட கட்சியை பிளவுபடுத்த முயற்சித்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கிளர்ச்சியாளர்கள் ஏற்கனவே கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இடதுசாரி கொள்கைகளை நிலைநாட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
முதல் தடவையாக கிளர்ச்சியாளர்கள் நேற்றைய தினம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் சமூகத்திடமிருந்து ஜே.வி.பி விலகிச் செயற்பட்டுள்ளதாக கிளர்ச்சிக் குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். வரலாற்றில் இழைக்கப்பட்ட இந்தத் தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment