Thursday,September, 29, 2011கொழும்பு:மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பான் கீ மூனிடமே கையளித்துள்ளார். எந்தவொரு நீதிமன்றத்தாலும் சவேந்திர சில்வாவை விசாரணைகளுக்கு அழைக்கமுடியாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இராஜ தந்திர ரீதியிலான சிறப்புரிமைகளுக்கு சர்வதேச நாடுகள் மதிப்பளிக்க வேண்டும். பதவியிலிருந்து விலக்கினால் மாத்திரமே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றில் நிறுத்த முடியும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்வில கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான நிரந்தர பிரதி வதிவிட பிரதிநிதியாக உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அமெரிக்காவின் நீதிமன்றம் ஒன்று அழைப்பானையும் விடுக்கப்பட்டுள்ளது. இது வேடிக்கையான விடயமாகும். ஐ.நா. வின் நிரந்தர பிரதி நிதிகளுக்கான இராஜதந்திர அந்தஸ்துகளின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு சவேந்திர சில்வாவை அழைக்க முடியாது.
அழைக்க வேண்டுமாயின் முதலில் இலங்கைக்கு அறிவித்து அவரது இராஜதந்திர அந்தஸ்தை இல்லாதொழிக்க வேண்டும் அல்லது ஐ.நா. அவரை வெளியேற்ற வேண்டும். இது இரண்டுமே நடைபெறாத விடயமாகும். எவ்வாறாயினும் ஐ.நா. பொதுக் கூட்டத் தொடருக்காக சென்றபோது மேற்படி பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பான் கீ மூனை தெளிவுபடுத்தியிருந்தார்.
எனவே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை பாதுகாக்கும் பொறுப்பு ஐ.நா. விற்குள்ளது என்றார்.
No comments:
Post a Comment