Saturday, September 03, 2011
புலிச் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு சட்ட ரீதியான அதிகாரம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும் குற்றம் சுமத்தியுள்ளன.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக அரசாங்கம் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சரத்துக்கள் குறித்து இதுவரையில் வர்த்தமானி அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என குறித்த இரண்டு கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் வரையில் குறித்த சரத்துக்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது எனவும், இந்தப் பின்னணியில் புலிச் சந்தேக நபர்களை எவ்வாறு தடுத்து வைத்திருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
5000த்திற்கும் மேற்பட்ட புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் உயர்பாதுகாப்பு வலய அறிவிப்பு ஆகியன சட்ட விரோதமானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து புலிகள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளிட்ட ஆதரவு அமைபுக்களை தடை செய்தல் மற்றும் புலிச் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் ஆகியன தொடர்பில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், நேற்றைய தினம் வரையில் வர்த்தமானி அறிவிப்புக்கள் எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், இதனால் புலிச் சந்தேக நபர்களை கைது செய்தல் சட்ட விரோதமானது எனவும் ஜே.வி.பி.யின். பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புலிச் சந்தேக நபர்களை தடுத்து வைத்திருத்தல் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களை அமுல்படுத்தல் ஆகிய சட்டத்திற்கு புறம்பானது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் கடந்த சில தினங்களாக புலிச் சந்தேக நபர்களை தடுத்து வைப்பதற்கான சட்ட ஒழுங்குகள் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5000த்திற்கும் மேற்பட்ட புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பூர் போன்ற உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு பொதுமக்களினால் பிரவேசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
சட்டத் திருத்தம் தொடர்பில் ஏதேனும் வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அரசாங்க அச்சுத் திணைக்களத்திடம் கோரியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், புதிய சட்டத்திருத்தங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கள் எதுவும் அச்சிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிச் சந்தேக நபர்களை தடுத்து வைத்தல் மற்றும் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலில் இந்த சரத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் அகற்றப்பட்டுள்ள நிலையில் வேறும் ஓர் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்க கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் பிரசூரமாவதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும இதனால் சட்ட அமுலாக்கத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment