Friday,September,16,2011தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.
இன்று ஆரம்பிக்கப்படும் பேச்சுவார்த்தையின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஏற்கெனவே கையளித்திருந்த தீர்வுத் திட்ட ஆலோசனைகள், சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா ஆகியோருடைய காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்ட ஆலோசனைகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் ஆலோசனைகள் என்பவற்றை ஆய்வுக்கெடுத்து அதனூடாக ஒரு தீர்வைக்காணலாம் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே மீளவும் இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடாத்தப்பட்ட 6 சுற்றுப் பேச்சுக்களின் போதும் திருப்திகரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக்கூறி கடந்த மே12ஆம் திகதி நடந்த 6வது சுற்றுப் பேச்சுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்து பேச்சுவார்த்தையிலிருந்து விலகியிருந்தது.
ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடந்தாலும் அவற்றில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுசிறு விடயங்களுக்குக் கூடத் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிக்கும் போக்கையே அரசு கடைப்பிடிக்கிறது. தலைமையுடன் பேசி முடிவு தெரிவிப்பதாக முதல் சுற்றுக்களில் கூறப்பட்ட விடயங்களுக்கே இதுவரை தீர்க்க மான பதிலை அரசு கூறவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அப்போது குற்றம் சாட்டியிருந்தது.
இலங்கை அரசுடன் 6 ஆம் கட்டப் பேச்சை முடித்துக்கொண்ட கூட்டமைப்பு பேச்சுக்குழு, நேரடியாக இந்தியத் தூதரகம் சென்று தூதர் அசோக் கே.காந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் , எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
பேச்சுக்களில் மாகாணத்துக்கு அதிகாரங்களைப் பகிர்வது குறித்து ஆராயப்பட்டது. எனினும், இன்னமும் தெளிவான இணக்கம் ஏற்படவில்லை. அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் இலங்கைத் தரப்பிடம் உற் சாகத்தைக் காணவில்லை. தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் அரசுத்தரப்பு செயற்படவில்லை.
உடனடியாகச் செய்ய வேண்டிய விடயங்களில் கூட இதுவரை இணக்கம் ஏற்படவில்லை. சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோர், தடுப்பு முகாம்களில் இருப்போர், மீளக்குடியமர்வு போன்ற விடங்களில் கூட இன்னமும் அரச தரப்பு தீர்க்கமான பதில் தரவில்லை. ஒவ்வொரு பேச்சிலும் இவை தொடர்பாக நாம் எடுத்துக்கூறியும் அரசு பதில் தரத் தயங்குகிறது.
இணங்கிய ஒரு சில விடயங்களைக் கூட நடைமுறைப்படுத்துவதில் கால இழுத்தடிப்புத் தொடர்கிறது. ஒரு தடவை ஆராயப்படும் விடயம் குறித்து உயர்மட்டங்களுடன் பேசியபின் அடுத்த தடவை பதிலளிப்பதாக அரச தரப்பினர் கூறுகின்ற போதும் அப்படி நடைபெறுவதே இல்லை.
பேச்சு நடைபெறும் திகதிகளுக்கு இடையில் நீண்ட இடைவெளி காணப்படுகிறது. விரைந்து பேச்சை முடிக்கும் நோக்கம் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்களை அரச தரப்பினர் மீது கூட்டமைப்பினர் முன் வைத்திருந்தனர்.
தாம் முன்வைத்த விடயங்கள் குறித்து எழுத்து மூலமான பதிலைக் கோரி இரண்டு வார காலக்கெடு விதித்து கூட்டமைப்பு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி இருந்த போதும் இலங்கை அரசாங்கம் அவற்றிற்கான எழுத்து மூலமான பதில் எதனையும் வழங்கியிருக்கவில்லை. தற்போது அவ்வாறான எழுத்து மூலமான பதில் எதனையும் கூட்டமைப்பிற்கு இலங்கை அரசு வழங்காத நிலையிலும் மீளவும் நாளைய பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு தயாராகி இருப்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.
இதேவேளை இன்று மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கான அழுதத்தத்தை இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்தியா கொடுத்துள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு ஏற்பட்டு வரும் அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக இந்தியாவே இரண்டு தரப்புக்களுடனும் பேசி பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வை ஏற்படுத்தியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இத்தலையீடு இலங்கையில் அதனுடைய இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதா என்ற கேள்வியை அவதானிகள் மட்டத்தில் எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment