Monday, September 26, 2011

கடன் நெருக்கடி பரவினால் சமாளிக்க முடியாது : ஐ.எம்.எப்., திட்டவட்டம்!

Monday, September 26, 2011
வாஷிங்டன் : "யூரோ மண்டலத்தின் கடன் நெருக்கடி, பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில், அவற்றுக்கு கடன் தவணைகள் அளிப்பதற்கான பணம், சர்வதேச நிதியமைப்பிடம் (ஐ.எம்.எப்.,) இல்லை' என, அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் தெரிவித்துள்ளார். "யூரோ' கரன்சி பயன்படுத்தும் 17 நாடுகளில், தற்போது கிரீஸ் எந்நேரமும் திவாலாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா தலைவர்களிடம், கிரீசை திவால் ஆவதில் இருந்து மீட்பதற்கு, எவ்வித யோசனையும் இல்லை.

இந்நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப்., தலைமையகத்தில், இரு நாட்களாக, உலக நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் தலைவர்கள், கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் வராமல் தடுப்பது குறித்து, இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த ஐ.எம்.எப்., தலைவர் கிறிஸ்டைன் லகார்ட், "ஐ.எம்.எப்.,பிடம் தற்போது உள்ள பணம், தற்போதைய பிரச்னைகளைச் சமாளிக்க போதுமானது தான். ஆனால், இந்தக் கடன் நெருக்கடி, பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில், அவற்றுக்கு கடன் தவணைகள் அளிக்க, ஐ.எம்.எப்.,பிடம் பணம் இல்லை' எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா நாட்டுப் பிரதிநிதிகள், மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் ஏற்படுமானால், அதைப் போக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். அதேநேரம், கிரீஸ் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசுலோஸ் கூறுகையில், "கிரீஸ் ஒரு போதும் திவாலாகாது. யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறாது. அந்த நிகழ்வுகள் நடந்தால், அது யூரோ மண்டலத்தை மட்டுமல்லாமல், உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, நாங்கள் உணர்ந்திருக்கிறோம்' என உறுதியளித்தார்.

No comments:

Post a Comment