Friday, September 30, 2011

சுவிஸ், ஆஸ்திரியாவுக்கு இன்று ஜனாதிபதி பிரதிபா பயணம்!

Friday, September 30, 2011
புதுடில்லி : ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், எட்டு நாள் அரசு முறைப் பயணமாக, இன்று சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். முதலில் சுவிட்சர்லாந்து செல்லும் ஜனாதிபதி பிரதிபா, அங்கு அக்டோபர் 4ம் தேதி வரை தங்கியிருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் உட்பட பல விஷயங்கள் குறித்து, அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுதவிர, இரு தரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கிறார். சுவிட்சர்லாந்து பயணம் முடித்து, அக்டோபர் 4ல் ஆஸ்திரியா செல்லும் பிரதிபா, அங்கு 7ம் தேதி வரை தங்கியிருப்பார். அங்கு, இரு தரப்பு உறவுகள் உட்பட பல விஷயங்கள் குறித்து, அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜனாதிபதியுடன் இந்தியத் தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் தலைவர் கே.கே.மோடி தலைமையிலான 45 பேர் கொண்ட வர்த்தகக் குழுவும் செல்கிறது. அத்துடன், மத்திய பார்லிமென்ட் விவகார இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா மற்றும் எம்.பி.,க்கள் சிலரும் உடன் செல்கின்றனர். ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறினார். சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் போது, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி, ஜெனிவாவில் உள்ள காந்தி சிலைக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார்.

No comments:

Post a Comment