Sunday, September 18, 2011

கிறீஸ் மனிதனினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்களை தந்தால் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் – பொலிஸ் மா அதிபர்!

Sunday, September 18, 2011
மட்டக்களப்பில் கிறீஸ் மனிதனினால் தாக்கப்பட்டு காயமடைந்து பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்களை தந்தால் அது தொடர்பில் விசாரணை நடாத்தி சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் (16.9.2011)அன்று மட்டக்களப்பில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்த கருத்து தொடர்பிலேயே பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பில் பத்து பெண்கள் இதுவரை கிறீஸ் மனிதனினால் தாக்கப்பட்டு காயமடைந்து வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இவர்களிடம் பொலிசார் வாக்கு மூலங்களை பெற்றனர் ஆனால் இதை செய்தவர்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. இதை செய்தவர்களை பொலிசார் கண்டுபிடித்து இதன் உண்மை நிலையை பொலிசார் தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்த போது அதற்கு பதலலித்த பொலிஸ் மா அதிபர் ஒருவார காலத்திற்குள் இது தொடர்பான விசாரணைகளை நடாத்தி அது தொடர்பான உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுப்பேன்.

அதற்காக பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் அது தொடர்பான தகவல்களை தாருங்கள் என பொலிஸ் மா அதிபர் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவிடம் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இரண்டு தினங்களுக்குள் இது தொடர்பான தகவல்களை தருவதாக பொலிஸ் மா அதிபரிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இவ்வாறுதான் ஆனந்த சங்கரி ஜனாதிபதியை சந்தித்த நேரம் யாழ்ப்பானத்தில் கிறீஸ் மனிதனினால் ஐந்து பெண்கள் தாக்கப்பட்டதை கூறினார்.

அது தொடர்பில் நாங்கள் விசாரணைகளை நடாத்தி இதற்குப்பின்னால் நின்ற சூத்திர தாரிகளை கண்டு பிடித்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். அது போல மட்டக்களப்பிலும் இதற்காக விஷேட பொலிஸ் குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு இதன் பின்னணியிலுள்ளவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment