Thursday, September 22, 2011

பாகிஸ்தானுக்கு கெடு தீவிரவாத ஆதரவை ஐஎஸ்ஐ கைவிட அமெரிக்கா எச்சரிக்கை!

Thursday, September 22, 2011
வாஷிங்டன் : தீவிரவாதிகள் நெட்வொர்க்குடன் தொடர்பு வைத்து மறைமுக போரில் ஈடுபடுவதை பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ நிறுத்த அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் பயிற்சிக்கு அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவுவதாக ஆதாரங்களை அமெரிக்கா திரட்டியுள்ளது. இதுபற்றி இந்தியா நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தீவிரவாதிகள் மீது போர் தொடுப்பதாக வெளியே காட்டிக் கொண்டு மறைமுகமாக தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதை ஐஎஸ்ஐ உடனடியாக நிறுத்த அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் அரசுக்கு தகவல்களை ஒபாமா அரசு அனுப்பியுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, தீவிரவாதிகளுடன் தொடர்பை ஐஎஸ்ஐ கைவிட்டு, சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும்.

தவறினால், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது தன்னிச்சையாக அமெரிக்கா தாக்குதல் நடத்தும் நிலை ஏற்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐ&யின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுத்துவதில் அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பனெட்டா மற்றும் அதிகாரிகள் உறுதியாக இருப்பதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment