Wednesday, September 7, 2011

எஸ்.வி.சேகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு!.

Wednesday, September 07, 2011
சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் வீடு மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மந்தைவெளிபாக்கம் 5வது தெருவில் மாஜி எம்எல்ஏ நடிகர் எஸ்.வி.சேகரின் வீடு உள்ளது. நேற்று இரவு 11.30 மணிக்கு ஒரு கார், 2 ஆட்டோ, 10 பைக்குகளில் வந்த 15 ஆசாமிகள் திடீரென்று எஸ்.வி.சேகர் வீடு மீது சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தினர். காம்பவுண்ட் சுவருக்குள் ஏறிக் குதித்து உள்ளே சென்ற ஆசாமிகள் கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

காருக்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதில் ஒரு குண்டு வெடித்து தீப்பிடித்தது. மற்றொரு குண்டு வெடிக்கவில்லை. இதற்கிடையில் ஒரு பெட்ரோல் குண்டை மாடி மீது வீசினர். இதில் எஸ்.வி.சேகருக்கு வழங்கப்பட்ட பரிசு கேடயம் உட்பட பரிசு பொருட்கள் தீயில் கருகின. மர்ம கும்பல் தொடர்ந்து வீட்டுக்குள் சரமாரியாக கல்வீசி தாக்கியது. அதில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதுகுறித்து வீட்டுக்குள் இருந்தபடியே, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.வி.சேகர் புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் புகழேந்தி, உதவி கமிஷனர் ரவிசங்கர் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இன்று காலையில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.வி.சேகர் வீடு மீது ஏற்கனவே 5 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதில் 3 முறை கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு முறை மட்டும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இப்போது மீண்டும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பட்டினப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment