Thursday, September 15, 2011

ஜெனிவா மனித உரிமை பேரவையின் மாநாட்டில் இலங்கையர் சிலரே எமக்கெதிராக செயற்பட்டுள்ளனர்-விமல் வீரவங்ச!

Thursday,September 15,2011
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இலங்கையர்கள் சிலரே செயற்பட்டுள்ளமை மிகவும் மோசமான விடயமாகும். இவ்வாறானவர்கள் ஜெனீவாவுக்கு சென்று புலிகளின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர் என்று நிர்மாணம் பொது வசதிகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஹங்குரன்கெத்தவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வீடமைப்பு நிர்மாண வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது

ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த மனித உரிமை கூட்டத் தொடர் நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையை சேர்ந்த சிலர் அங்கு சென்று இலங்கைக்கு எதிராக செயற்பட்டுவருகின்றøம மிகவும் மோசமான விடயமாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி. ஒருவர் அதிக காலமாக ஜெனீவா நகருக்கு சென்று இலங்கைக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் செயற்பட்டுவருகின்றார். அதற்கு மேலதிகமாக அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையர்கள் சிலர் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக செயற்பட்டுவருகின்றனர்.

பிரிவினைவாதத்துடன் இணைந்துகொண்டு இலங்கையை சிக்கவைக்க எந்தளவு முயற்சித்தாலும் அது நிறைவேறாது. உலகின் அதிகமான நாடுகள் பிரிவினை வாதத்துக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் உள்ளன.

மேலும் பொருளாதார ரீதியில் எமது நாட்டை சிக்கவைக்கவே சில சர்வதேச சக்திகளுக்கு தேவையாகவுள்ளது. அதனால் பொய்யான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். எமது நாட்டைச் சேர்ந்தவர்களே எமக்கு எதிராக உள்ளனர். ஆனால் அவர்களினால் எதனையும் செய்ய முடியாது. இந்நிலையில் எமது நாட்டின் அபிமானத்துக்காக அணிதிரள்வது அனைவரினதும் பொறுப்பாகும்.

No comments:

Post a Comment