Friday, September 23, 2011

முஸ்லிம் மக்களோ சேரி குடிசை வீடுகளில் வாழ்க்கை நடத்துபவர்களோ கொழும்பு மாநகரில் இருந்து வெளியேற்றப் படமாட்டார்கள்- கோதபாய ராஜபக்ஷ!

Friday 23rd of September 2011
கொழும்பு நகர் வாழ் குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் மக்களோ சேரி குடிசை வீடுகளில் வாழ்க்கை நடத்துபவர்களோ எக்காரணம் கொண்டும் கொழும்பு மாநகரில் இருந்து வெளியேற்றப் படமாட்டார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் சேரி வீடுகளில் வாழும் மக்களுக்கு நல்ல வசதியான வீடமைப்பு திட்டங்களை அமைத்துக் கொடுப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கிறதென்று தெரிவித்த அவர், இதன் மூலம் சேரி வீடுகளில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சகல வசதிகளுடைய வீடுகளை கொழும்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரசாங்கம் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறதென்று கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், விரைவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கொழும்பு மாநகரில் நிர்மாணிக்கப்படுமென்றும் இவ்விதம் ஒவ்வொரு வீட்டை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் 30லட்சம் ரூபாவை செலவிட்டு வருகிறதென்று கூறினார். இவ்விதம் சேரிவீடுகளில் வாழும் மக்களுக்கு வசதியான சமயலறை, குளியலறை, கழிவறை தனியான படுக்கை அறைகள் போன்ற சகல வசதிகளையும் கொண்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த வீடுகள் பலமாடிக் கட்டடங்களாக அமைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

எனவே, இந்த மக்கள் படியேறாமல் தரையில் இருந்து மாடிகளுக்கு செல்லக்கூடியவாறு லிப்ட்கள் பொருத்தப்படும் என்றும் இவற்றிற்கு மின்சார குடிநீர் வசதிகளும், செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஏற்கனவே, இவ்விதம் தனித்தனி வீடுகளை உள்ளடக்கும் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அங்குள்ள குடியிருப்பாளர்களின் நீர் தேவையை ஈடு செய்வதற்காக ஒவ்வொரு கட்டடத் தொகுதிக்கும் தனியான நீர்த்தாங்கிகள் நிர்மாணிக்கப்படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment