Friday, September 9, 2011

கிளிநொச்சி நகர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கண்ணன் ஆலயப்பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவம் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளது!

Friday, September 09, 2011
கிளிநொச்சி நகர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கண்ணன் ஆலயப்பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவம் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், கிளிநொச்சி திருநெறிக்கழகக் காணி, கட்டடங்களிலும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிக்கட்டங்களிலும் பொதுமக்களுக்குச் சொந்தமான சில காணிகள் வீடுகளிலும் வன்னி யுத்தத்தின் பின்னர் காவல் அரண்கள் மற்றும் பாரிய மண் அணைகளையும் அமைத்து இராணுவம் இதுவரை தங்கியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது இம்முகாமைக் கைவிட்டு இராணுவம் வெளியேறியுள்ள போதும் பொதுமக்களின் காணிகள் வீடுகளை உத்தியோக பூர்வமான முறையில் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதுடன் காணி உரிமையாளர்கள் காணிக்குரிய உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்து தமது காணியை உறுதிப்படுத்தி அதன்பின் தமது அனுமதியுடன் காணிகளைப் பொறுப்பேற்குமாறு இராணுவ சிவில் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஏற்கனவே பிரசித்திபெற்ற கண்ணன் ஆலயத்திலும் இச் சுற்றாடலிலுள்ள கட்டடத் திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களம் கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி அலுவலக வளாகம், தனியார் வீடுகள் முதலானவற்றில் தங்கியிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எடுத்த நடவடிக்கையையடுத்து அவ் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி நகர் கிராம அலுவலர் பிரிவில் பரவிப்பாஞ்சானிலும் தற்போது யுத்தத்திற்குப் பின்னர் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் கிளிநொச்சி அருள்மிகு கந்தசாமி ஆலயவளாக மடாலயப் பகுதியிலும் அதனை அண்டிய கடைகள் வீடுகளிலும் இராணுவத் தரப்பு நிலை கொண்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment