Monday, September 26, 2011மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.டீ.ஆர்.வனராஜாவை பதுளைக்கு இடம்மாற்றுவதனை தடுக்குமாறு தெரிவித்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று ஆராய்ந்த போதே டப்ளியூ.எல்.ரஞ்சித் சில்வா மற்றும் நலீன் பெரேரா ஆகிய நீதியரசர்கள் குழாம், பொலிஸ் மா அதிபருக்கும், மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நான்கு வருடங்கள் தாம் துறைமுக பொலிஸில் பணியாற்றியதாகவும், வருடாந்த இடமாற்றத்தின் போதே மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தம்மை தரக்குறைவாக பேசியதைத் தொடர்ந்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் குறித்த தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சம்பவத்தினை அடுத்து பதுளைக்கு தம்மை இடம்மாற்றுவதற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்ததாகவும், இது கட்டாய இடமாற்றம் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மனு விசாரணை நிறைவடையும் வரை இடைக்கால தடை உத்தரவு செல்லுபடியாகும் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் ஒக்டோபர் 12 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment