Monday, September 26, 2011சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, சென்னையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளுடன் மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 21-ம் தேதி வெளியிடப்பட்டது.
மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 29-ம் தேதி மனு தாக்கல் முடிகிறது. 30-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுவை வாபஸ் பெற அக்டோபர் 3 கடைசி நாளாகும். முதல்கட்டமாக அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும், இரண்டாவது கட்டமாக எஞ்சியுள்ள நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் சேவியர் கிறிசோ நாயகம், டிஜிபி ராமானுஜம், உளவுத்துறை கூடுதல் டிஜிபி ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, வடக்கு மண்டல ஐஜி சைலேந்திரபாபு, தேர்தல் பிரிவு ஐஜி அலெக்சாண்டர் மோகன், எஸ்பி மோகன் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியல் தயாரிப்பது, அந்த இடங்களில் அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு பிறகு மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும், நியாயமாகவும் நடத்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை சிறப்பாக செய்தல், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் அரசு அச்சகங்களுக்கும், வாக்குச்சீட்டுகளை வினியோகம் செய்யும் மையங்களுக்கு எடுத்து செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு அளித்தல், வாக்குச்சாவடிகளுக்கான தளவாட பொருட்களை வினியோகிக்கும் மையங்கள், வாக்குச்சீட்டுகள் உள்ள பெட்டிகள் வைக்கும் அறை ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், பொதுமக்கள் புகார் கொடுக்க ஏதுவாக காவல்துறையினரின் தொடர்பு எண்கள் அறிவித்தல், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்துதல், வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், பிரசாரம், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்தல், முறைப்படுத்துதல், ஒலி பெருக்கி மற்றும் வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்குதல், வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடுவதை தடுத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை தேர்தலுக்கு முன் காவல்துறையினரிடம் ஒப்படைக்க செய்தல், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் அரசியல் தலைவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளித்தல், தேர்தல் காலங்களில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளை கண்காணித்தல், தேவையான இடங்களில் வாகன சோதனை மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
தேர்தல் காலங்களில் மது விற்பனையை கண்காணித்தல், அரசு வாகனங்கள் முறையற்ற முறையில் பயன்படுத்துவதை தடுத்தல், மாநில எல்லைகளில் பாதுகாப்பை அதிகரித்து கண்காணித்தல், தேர்தல் பணிக்கு செல்லும் காவல்துறையினருக்கு பயிற்சி அளித்தல் உள்பட பல்வேறு இனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் கமிஷனர் நாளை ஆலோசனை நடத்துகிறார். இதில் எல்லா கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
வாக்கு எண்ணிக்கை ஒத்திவைக்கப்படுமா?
உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடக்கிறது. அன்றுதான் திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, திருச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தின்போது மாநில தேர்தல் கமிஷனரிடமும் இதுகுறித்து கட்சிகள் கோரிக்கை வைக்கும் என கூறப்படுகிறது. கட்சிகள் கோரிக்கையை அடுத்து திருச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment