Thursday, September 22, 2011சென்னை: ராஜீவ் கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றாவிட்டால் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம்தான் நடக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற கோரி தமிழக காங்கிரஸ் சேவா தளம் சார்பில் அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் பின்புறம் இன்று உண்ணாவிரதம் நடந்தது. அமைப்பின் தலைவர் கோவை செல்வராஜ் தலைமை தாங்கினார்.
உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டவர் ராஜீவ். அவரை தமிழின துரோகிகள் படுகொலை செய்தார்கள். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பை நிறைவேற்றவிட்டால் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. தலைவர்களுக்கும் பாதுகாப்பு கிடையாது. தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம்தான் நடக்கும்.
எனவே, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சட்டமன்றத்தில் ராஜீவ் கொலையாளிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு கோரிக்கைதானே தவிர ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. இவ்வாறு தங்கபாலு பேசினார். காங்கிரஸ் தலைவர்கள், பாரமலை, அன்பரசு, பலராமன், சேவாதள நிர்வாகிகள், பாஸ்கர், கல்பனா, குங்பூ விஜயன், நாரயணன், சாந்தாராம், கஜநாதன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment