Thursday, September 22, 2011
திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி கொலையாளிகள் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உடனே நிறைவேற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காங்கிரசார் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அண்ணாசிலை அருகே உண்ணாவிரதம் இருந்தனர்.இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை எதிர்த்து போட்டி உண்ணாவிரதம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சி, புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சியினர் போலீசில் அனுமதி கோரினர். ஆனால் போலீசார் இவர்களது உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுத்து விட்டனர். எனினும் அவர்கள் தடையை மீறி உண்ணாவிரதம் இருப்பதற்காக சத்திரம் பஸ்நிலைய பகுதிக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் காமராஜர் சிலையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தை, புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆவேசமடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கூடுதல் போலீசார் அங்கு வரவழைக் கப்பட்டனர். மறியல் செய்த விடுதலை சிறுத்தை கட்சியினர், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சியினர், பெரியார் திராவிடர் கழகம் நிர்வாகிகள் ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இந்த வேன் காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்த பகுதி வழியாக சென்றது. அப்போது வேனில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர், காங்கிரஸ் கட்சியினரை பார்த்து கோஷம் போட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் போலீஸ் வேன் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதனால் போலீஸ் வேன் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தால் அங்கு கூடி நின்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்......
காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்த இடம் வழியாகவே அந்த வேன்கள் சென்றன. முதலில் சென்ற வேன் உண்ணாவிரதம் இருந்த காங்கிரஸ் கட்சியினரை கடந்துசென்றுவிட்டது. 2-வதாக வந்த வேனை காங்கிரஸார் வழிமறித்து கோஷமிட்டனர். அந்த நேரம் பழுது காரணமாக புறப்பட இயலாமல் அந்த இடத்தில் திடீரென நின்றுவிட்டது. அப்போது அந்த வேனில் இருந்து காங்கிரஸ் கட்சியினரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் கற்கள், செருப்புகளை வேனை நோக்கி வீசினர். இதில் வேனுக்குள் இருந்த குமார், சங்கர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் வேனைக் கிளப்பிக் கொண்டு போலீசார் வேகமாகச் சென்றனர். கைது செய்யப்பட்ட 69 பேரும் ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை என்று கோஷமிட்டனர். போலீசார் அங்கேயே மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment