Friday, September 16, 2011

தருஷ்மன் அறிக்கையினை பேரவையில் ஆராய்வதற்கு இடமளிக்கமாட்டோம்-மஹிந்த சமரசிங்க!

Friday, September 16, 2011
தருஷ்மன் அறிக்கை நடைமுறைகளுக்கு முரணான வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பேரவையில் அந்த அறிக்கை தொடர்பில் ஆரய்வதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இது தொடர்பில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தி உள்ளோம். பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் எமக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை விடயங்களுக்கான ஜனாதிபதியின் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் சமரசிங்க அங்கிருந்தவாறு தகவல் வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ. மூன் தருஷ்மன் அறிக்கையை மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு பான் கீ. மூன் தருஷ்மன் அறிக்கையை மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்தமை பேரவையின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்று இலங்கை தூதுக்குழுவினர் தெரிவித்திருந்ததுடன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.

கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி முடிவடையவுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் சமரசிங்க ஜெனிவாவிலிருந்தவாறு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் இலங்கைக்கு மிகப்பெரிய ஆதரவு காணப்படுகின்றது. இதுவரை பல நாடுகளின் பிரதிநிதிகளுடனும் அமைப்புக்களுடனும் விரிவான முறையில் பேச்சு நடத்திவருகின்றோம்.

குறிப்பாக மனித உரிமைப் பேரவையின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஐ.நா. வின் தருஷ்மன் அறிக்கையை பேரவைக்கு சமர்ப்பித்துள்ளனர். எனவே அதனை எந்த வகையிலும் பேரவையில் ஆராயாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இது தொடர்பில் சகல நாடுகளையும் தெளிவுபடுத்தியுள்ளோம். அதிகளவான நாடுகள் எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்த வகையில் தருஷ்மன் அறிக்கையை பேரவையில் இம்முறை ஆராய்வதற்கு இடமளிக்கமாட்டோம்.

அதாவது எந்தவொரு விடயத்தையும் சட்டவிரோதமாகவும் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டும் செய்தால் அது வெற்றிபெறாது என்பதனை நாங்கள் நிரூபித்துள்ளோம். தருஷ்மன் அறிக்கையை பேரவையின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டே கொண்டுவந்தனர் என்றார்.

No comments:

Post a Comment