Sunday, September 25, 2011

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணி பதற்றமான பகுதிகள் எவை? கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

Sunday, September 25, 2011
சென்னை: உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பதற்றமான பகுதிகள் எவை என்ற பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக அக்.17ம் தேதி 9 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேரூராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக அக்.19ம் தேதி 65 நகராட்சி, 270 பேரூராட்சி, 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டன. எந்த முறையும் இல்லாத வகையில் இந்த முறை பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை தனியே களம் காண்கிறது. சில கட்சிகள் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, பிரசாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடத்தை விதி முறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். முதல் கட்டமாக பதற்றமான பகுதிகள் எவை? பிரச்னைக்குரிய பகுதிகள் எவை? என்ற பட்டியலை தயார் செய்யப்பட்டு வருகிறது. இடத்துக்கு தகுந்தால்போல் போலீசார் குவிக்கப்படுவார்கள்.
தேவைப்பட்டால் மத்திய ரிசர்வ் போலீசாரையும் அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலின் போது பிரச்னை ஏற்படுத்த கூடிய நபர்கள் யார் என்ற பட்டியலும் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தேர்தல் பிரிவு ஐஜியாக அலெக்ஸாண்டர் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment