Thursday, September 8, 2011

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்நாட்டில் வாழும் தமிழர்களுக்கே ஆபத்தாக அமையும்-சம்பிக்க ரணவக்க!

Thursday, September 08, 2011
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது உள்நாட்டில் வாழும் தமிழர்களுக்கே ஆபத்தாக அமையும். என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

எனவே புலம்பெயர் புலிதமிழர்களும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையான ஆதரவு இலங்கைக்கு உள்ளது. ஆனாலும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் போலியான பிரசாரங்களும் குற்றச்சாட்டுகளும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழுத்தமாக அமைந்துள்ளன. எவ்வாறாயினும் இந்தியாவின் நிலைப்பாடு விசேடமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,

மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சுமத்தி வருகின்றன. ஆனால் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டால் எண்ணிலடங்காது.

இவற்றிற்கெதிராக ஐ.நா. விசாரணைகளை முன்னெடுக்காது உலகத்திலேயே முதன்மையாக காணப்பட்ட புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றிக் கொண்ட எமது இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.

குறிப்பாக எதிர்வரும் 12 ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சாசன மாநாட்டில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தை மேற்கொள்ள குறிப்பிட்ட சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறான ஒரு விசாரணைக்கு அனுமதி வழங்கப்படுமாயின் அது சர்வதேச பயங்கரவாதத்திற்கு சாதகமாக அமைந்து விடும்.

எனவே சர்வதேச சமூகம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மேற்குலக நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக செயற்படும் போது அதன் விளைவுகள் இலங்கை தமிழர்களையே பாதிக்கும்.

கடந்த 30 ஆண்டுக் காலத்தில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை சற்று அவதானிக்க வேண்டும்.

தமிழர்கள் இலங்கையில் பின்னடைவுகளை காண்பதற்கு அவர்களின் பிரிவினைவாத கொள்கைகளே காரணம்.

எனவே முன்னைய கால கட்டத்திற்கு மீண்டும் தமிழ் மக்களை தள்ளிவிட்டு ஆபத்துக்களை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்களும் சர்வதேச சமூகமும் முயற்சிக்கக் கூடாது.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் உள்ள 46 நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உண்டு. எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை.

2009 ம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அவை தோல்வியடையச் செய்யப்பட்டன என்றார்.

No comments:

Post a Comment