Friday, September 23, 2011

திருச்சி மேற்கு தொகுதியில் கருணாநிதி பிரசாரம் : மு.க.ஸ்டாலின்!

Friday 23rd of September 2011
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்ய உள்ளதாக முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், கே.சி.பழனிச்சாமி, திருச்சி மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர் உள்ளிட்ட திமுகவினரை கட்சியின் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் சிறை வாசலில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:

இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக திமுக தலைவர் கருணாநிதி நிச்சயம் திருச்சி வருவார். தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 27-ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நான் பங்கேற்க உள்ளேன். மேற்கு தொகுதி வேட்பாளராக நேரு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீது மேலும் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. சீப்பை ஒளித்து வைப்பதால் திருமணம் நின்று விடாது.

பல சிறைகளில் திமுகவினர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், திருச்சி சிறையில் மட்டும் அதிக கெடுபிடி காட்டப்படுகிறது. இதுபற்றி சிறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு இது மேலிட உத்தரவு என்கின்றனர். தமிழகத்தில் ஜெயலலிதா சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். ஜனநாயக படுகொலை நடந்து வருகிறது. இவற்றை முன் வைத்தும், கடந்த 5 ஆண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறியும் பிரசாரம் செய்ய உள்ளோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

நேரு சார்பில் ஸ்டாலின் மனு தாக்கல்

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், நேருவின் சார்பில் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மதியம் மூத்த நிர்வாகிகள், தொண்டர்களுடன் பிற்பகல் 1 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஸ்டாலின், நேருவின் வேட்பு மனுவை மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சம்பத்திடம் தாக்கல் செய்தார்.

No comments:

Post a Comment