Thursday, September 8, 2011

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி மீது இனந்தெரியாத இளைஞர்கள் தாக்குதல்!

Thursday, September 08, 2011
இலங்கை: சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குச் சென்ற மாணவியை வீதியில் இடைமறித்த இனந்தெரியாத நான்கு இளைஞர்கள் அந்த மாணவியின் நெஞ்சுப் பகுதியில் கூரிய பிளேட்டினால் கீறி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை சாவகச்சேரி கச்சாய் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றுக்காலை சாவகச்சேரி கச்சாய் வீதியில் இருந்து கயிலாயபிள்ளை வீதி ஊடாக மாணவி சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு நடந்து சென்றுள்ளார். இந்த வேளையில் மாணவியைத் திடீரென இடை மறித்த நான்கு இளைஞர்களில் ஒருவர் மாணவியின் தலை மயிரைப் பிடித்து இழுக்க மற்றவர் கூரிய பிளேட்டினால் மாணவியின் நெஞ்சில் கீறியுள்ளார். எனினும் தெய்வாதீனமாக மாணவிக்குக் காயம் ஏற்படவில்லை. அவர் அணிந்திருந்த பாடசாலை சீருடை மட்டும் கிழீந்திருந்தது.

மாணவி உடன் கூச்சலிட்டதால் அந்தப் பகுதியில் நின்ற வேறு ஒரு இளைஞர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்த தாகவும் அதனைக் கண்ட நான்கு இளைஞர்களும் இரு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாகவும் அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் நேற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்களும் இதனால் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற சாவகச்சேரி இந்துவின் அதிபர் மாணவியின் வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தார்.

இதேவேளை ஏழாலை மேற்குப் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்ம மனிதர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஞானேஸ்வரன் நவீனன் என்ற இளைஞரே காயமடைந்தவராவார்.

இந்த இளைஞர் இயற்கைக் கடன் கழிக்க வெளியே நின்ற வேளை மர்ம மனிதரின் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment