Friday, September 30, 2011

பொதுநலநாய நாடுகள் அமைப்பு இரண்டாக பிளவடையக் கூடும் என இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

Friday, September 30, 2011
பொதுநலநாய நாடுகள் அமைப்பு இரண்டாக பிளவடையக் கூடும் என இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியன தொடர்பில் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமிக்கும் திட்டத்திற்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய அமைச்சுத் திட்டக் குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்த யோசனைத் திட்டம் உறுப்பு நாடுகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் அமையக் கூடும் என இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பினை வலுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர புதிய அமைப்புக்களை அமைப்பதில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியமில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தக் கூடிய வகையில் புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீது அதீதமான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் பாதக விளைவுகள் ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அளவுக்கு மேல் அழுத்தங்களை பிரயோகித்து துரித கதியில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் மனித உரிமை விவகாரம் தொடர்பிலான ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment